உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்விக்கி, சொமாட்டோ ஊழியர்களை கண்காணிக்க விதிகள் கோரி வழக்கு டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ஸ்விக்கி, சொமாட்டோ ஊழியர்களை கண்காணிக்க விதிகள் கோரி வழக்கு டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், புதுக்கோட்டையை சேர்ந்த எல்.என்.நித்தியானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனு:வீட்டில் இருந்தவாறே, 'ஆன்லைனில்' அன்றாடம் தேவைப்படும் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை, 'ஆர்டர்' செய்வது, தற்போது அதிகரித்துள்ளது. இவற்றை, 'ஸ்விக்கி, டன்சோ, சொமாட்டோ' உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்கள், வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்கின்றனர். உணவு, மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனம் சீருடை வழங்கி உள்ளது.ஆனால், அவர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை ஏதும் இல்லை. அதேபோல, ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் போல நடித்து, குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.சென்னையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் கடந்தாண்டு உணவு பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனத்தின் சீருடையை அணிந்து வந்தவர்களால், வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, உணவு, பொருட்களை டெலிவரி செய்யும் நபர்களை கண்காணிக்கவும், அவர்களை ஒழுங்குபடுத்தவும் விதிகளை வகுக்க வேண்டும் என, டி.ஜி.பி.,க்கு மனு அளித்தேன். மனுவை பரிசீலிக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.இம்மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு தமிழக டி.ஜி.பி.,யும் ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட டெலிவரி நிறுவனங்களும், நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி