உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழுநோய் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தர மக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள்

தொழுநோய் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தர மக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள்

சென்னை: 'தொழுநோய் பாதிப்பு வெளிப்பட துவங்க, ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என்பதால், ஆரம்ப நிலை பரிசோதனைக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.'மைக்கோ பாக்டீரியம் லெப்ரே' என்ற பாக்டீரியா வால், தொழுநோய் ஏற்படுகிறது. தொற்று பாதித்த நபரின், இருமல் மற்றும் தும்மல் வாயிலாக வெளியேறும் நீர்த்திவலைகளில் இருந்து, பிறருக்கும் இந்நோய் பரவுகிறது. இக்கிருமி ஒருவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்த, ஐந்தில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம்.

ஆறாத புண்கள்

நோய் எதிர்ப்பாற்றல் குறையும்போது, இந்நோய் வெளிப்படத் துவங்கும். ஆரம்ப நிலையில் சருமத்தின் சில இடங்களில், நிறமிழப்பு, உணர்விழப்பு ஏற்படும். அந்த கட்டத்திலேயே, தொழுநோயைக் கண்டறிந்து, கூட்டு மருந்து சிகிச்சை அளித்தால், 100 சதவீதம் பாதிப்பை குணப்படுத்த முடியும். அலட்சியம் காட்டினால், தோல் மற்றும் நரம்புகளை பாதிப்பதுடன், கண், கை, பாதங்களில் குறைபாடுகள் ஏற்படும்.எனவே, தமிழகத்தில் தொழுநோய் பாதிப்பை, கட்டுப்படுத்தும் வகையில், பாதிப்பு அதிகம் உள்ள, 133 வட்டாரங்கள், 27 நகரப்பகுதிகளில், 50.76 லட்சம் வீடுகளில் வசிக்கும், 2.01 கோடி மக்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. வரும், 28ம் தேதி வரை, வீடு வீடாக பரிசோதனைக்கு வரும் பணியாளர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சருமத்தில் உணர்வு இழப்பு, நிறமிழப்பு, காது மடலில் வீக்கம் அல்லது கட்டி, கால்கள் தளர்ந்து போகும் நிலை, விரல்கள் வளைந்து போதல், கைகளில் பொருட்கள் உறுதியாக பிடிக்க இயலாமை, கை, கால்களில் அரிப்பு, ஆறாத புண்கள் போன்றவை இருந்தால், அதனை அலட்சியப்படுத்தாமல், பரிசோதனைக்கு வரும், மருத்துவக் குழுவினரிடம் தெரிவிக்க வேண்டும்.

கூட்டு மருந்து சிகிச்சை

கடந்த ஆண்டு நடந்த பரிசோதனையில், 320 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டு, கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மாத உதவித் தொகையாக, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழக மக்கள் தொகையில், 0.27 சதவீதம் பேர் தொழுநோயாளிகளாக உள்ளனர். எனவே, ஆரம்ப நிலையில் பரிசோதித்து, தொழுநோயை கட்டுப்படுத்த, மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை