உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் 100% காலி: நோய் தடுப்பு பணி பாதிப்பு நோய் தடுப்பு, கண்காணிப்பு பணிகள் பாதிப்பு

சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் 100% காலி: நோய் தடுப்பு பணி பாதிப்பு நோய் தடுப்பு, கண்காணிப்பு பணிகள் பாதிப்பு

சென்னை:துணை சுகாதார நிலையங்களில், சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், 100 சதவீதம் காலியாக உள்ளதால், நோய்த்தடுப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழக பொது சுகாதாரத் துறையின் கீழ், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள் என, மூன்று வகையான அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

கோரிக்கை

துணை சுகாதார நிலையங்கள், 8,713 உள்ளன. இவற்றில், 1,640 சுகாதார ஆய்வாளர் நிலை - 2 பணியிடங்கள் உள்ளன. இவை அனைத்தும் காலியாக உள்ளன.இதனால், கிராம பகுதிகளில், நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை, முறையாக மேற்கொள்ள முடியவில்லை. இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படாததால், அப்பணியை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும், முதல்நிலை சுகாதார ஆய்வாளர்களே சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது.இதனால், அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் மணிவண்ணன், செயலர் குமார் ஆகியோர் கூறியதாவது:துணை சுகாதார நிலையங்களில், 8,000க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர் கள் பணியாற்றி வந்தனர். இப்பணியிடங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு, 1,640 க்கு வந்தது.

ஆர்ப்பாட்டம்

தற்போது, அப்பணியிடங்கள் அனைத்தும், அதாவது, 100 சதவீதம் காலியாக உள்ளன. இதனால், டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, எலி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள், பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பணிகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.எனவே, 1,640 இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை, அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். பணியிடங்கள் எண்ணிக்கையை, 2,715 ஆக அதிகரிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி வரும், 13ம் தேதி, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகங்கள் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை