9 மாவட்டங்களில் இன்று கனமழை வானிலை மையம் தகவல்
சென்னை:வளிமண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், சேலம் முதல் கோவை வரையிலான, ஒன்பது மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: 'டானா' புயல், வட மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மாறும். இந்த புயல், இன்று இரவு அல்லது நாளை அதிகாலை, ஒடிசா - மேற்குவங்க கடற்கரை பகுதியில், பூரி - சாகர் தீவுகள் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது, அதிகபட்சமாக, மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது.'டானா' புயல் காரணமாக, வங்கக்கடலில் பல்வேறு இடங்களில், அதிகபட்சமாக மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.