மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கன மழை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை: தமிழகத்தின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, கர்நாடகா மற்றும் அதையோட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 26 வரை, மிதமான மழை தொடரலாம்.மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, கரூர், திருச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யலாம். நாளை தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'டானா' புயலால் பாதிப்பில்லை
இந்திய வானிலை துறை வெளியிட்ட அறிக்கை:மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இன்று காலை, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும். நாளை புயலாக மாறி, வடமேற்கு திசையில் ஒடிசா நோக்கி நகரும். நாளை மறுநாள் காலை, இந்த புயல், ஒடிசா - மேற்கு வங்க கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வங்கக்கடலில் தற்போது உருவாகி உள்ள புயலுக்கு கத்தார் நாடு அளித்த, 'டானா' என்ற பெயர் சூட்டப்பட வாய்ப்புள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கியே, இதன் நகர்வு இருப்பதால், தமிழகத்துக்கு இந்த புயலால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.