வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வலுவடைய வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. இதையொட்டி, கடல் மட்டத்தில் இருந்து, 5.8 கி.மீ., உயரத்தில் வளி மண்டல சுழற்சியும் நிலவுகிறது. இங்கு காணப்படும் குறிப்பிட்ட சில சாதக சூழல் காரணமாக, காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கில் நகர்ந்து, இன்று வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, நாளை தமிழகம் மற்றும் இலங்கை கரையை நெருங்கலாம். இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை, இன்று முதல் தீவிரமடைய வாய்ப்புள்ளது. கடலோரம் மற்றும் உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். இன்று
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான மஞ்சள், 'அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாளை
கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே போன்று, 12, 13ம் தேதிகளிலும் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காற்று முறிவு தான் பிரச்னை!
தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது: 'பெஞ்சல்' புயல் மற்றும் அதற்கான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சந்தித்த அதே பிரச்னைகள், தற்போது உருவாகியுள்ள அமைப்புக்கும் தொடர்கின்றன. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான இடத்தில் காற்று முறிவு காணப்படுவதால், அது வலு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை படிப்படியாக தீர்ந்து வருகிறது. இந்த அமைப்பு, நாளை காலை இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலுக்கு வந்து விடும். அதன்பின், சாதகமான சூழல் உருவாகி, இந்த அமைப்பு மிகவும் மெதுவாக, டெல்டா மாவட்டங்களின் கடற்கரையை நோக்கி நகரலாம். பின்னர், நாகப்பட்டினம் அல்லது அதை ஒட்டிய பகுதியில் கரையை கடந்து வலுவிழக்கும். இதன் வெளிச்சுற்று பகுதியில் அடர்த்தியான மேகக் கூட்டங்கள் வரும் நிலையில், சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான மாவட்டங்களுக்கு மழையை கொடுக்கும். சில இடங்களில் குறுகிய நேரத்தில் தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.