தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை: 'வளிமண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில், 13 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது. அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில், 14 செ.மீ., மழை பெய்துஉள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கலயநல்லுாரில், 13; நாமக்கல் மாவட்டம் நாமக்கல், ராசிபுரம், கடலுார் மாவட்டம் அண்ணாமலை நகர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுர்கம் ஆகிய இடங்களில் தலா, 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு அரபிக்கடலில், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால், நாளை ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், அரபிக்கடல் பகுதியில், நாளை மறுநாள் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம். அதனால், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யலாம். சென்னையில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
90 சதவீதம் கூடுதல்
இதுகுறித்து வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அமுதா கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 1 முதல் நேற்று வரையிலான காலகட்டத்தில், இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு, 10.14 செ.மீ., ஆனால், நடப்பாண்டில், 19.27 செ.மீ., மழை பெய்துள்ளது. அதாவது, இயல்பை விட, 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இந்த குறிப்பிட்ட கால கட்டத்தில், தினமும் ஏதேனும் ஒரு பகுதியில் மழை பெய்து வந்ததே இதற்கு காரணம்.அந்தமான் கடல் பகுதியில் துவங்கிய தென்மேற்கு பருவமழை, தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பரவி வருகிறது. கேரளாவில், வரும், 27ம் தேதி பருவமழை துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஓரிரு நாட்களில், தமிழகத்தில் பருவமழை துவங்கி விடும். இவ்வாறு அவர் கூறினார்.