ரயில்களை வழியில் நிறுத்தியதால் பாதிப்பு ரயில்வேயிடம் முறையிட ஐகோர்ட் அறிவுறுத்தல்
சென்னை:மழை வெள்ளத்தால் ரயில்களை நிறுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, ரயில்வே துறையிடம் முறையிடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.புயல் மழை காரணமாக, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வெள்ளப்பெருக்கால் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையில், ரயில் பாலத்தின் மேல் தண்ணீர் அதிகம் சென்றது. கன்னியாகுமரி, பாண்டியன் உள்ளிட்ட, 12 விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. காலை உணவு
அதிகாலையில் சென்னை வரவேண்டிய ரயில்கள், திருக்கோவிலுார், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக, மாலையில் வந்து சேர்ந்தன.கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம் அருகே திருக்கோவிலுார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம் - திருக்கோவிலுார் இடையில் மாம்பழபட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.திருக்கோவிலுாரை அடுத்த ரயில்வே மேம்பாலத்தில் தண்ணீர் அதிகம் சென்றதால், இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. அதனால், பயணியருக்கு காலை உணவு கிடைக்கவில்லை; மிகவும் அவதிப்பட்டனர்.எந்த உதவியையும் வழங்காததால், பயணியர் பாதிக்கப்பட்டதாக, வழக்கறிஞர் எம்.சி.சாமி என்பவர், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் அமர்வு' முன், நேற்று முறையிட்டார். 5,000 இழப்பீடு
தண்ணீர், உணவு இன்றி கஷ்டப்பட்ட பயணியருக்கு, 5,000 ரூபாய் இழப்பீடும், டிக்கெட் கட்டணத்தை திருப்பி தரவும், ரயில்வே துறைக்கு உத்தரவிடும்படி, வழக்கறிஞர் சாமி கோரினார். ரயிலில் பயணித்த இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.இதையடுத்து, 'வேண்டுமென்றே எவரும் இதுபோன்று செயல்பட மாட்டார்கள்; அவர்களின் நிலையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், இதுகுறித்து ரயில்வே துறைக்கு மனு அளிக்கலாம்' என, முதல் அமர்வு அறிவுறுத்தியது. 'இந்த பிரச்னை குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் யாரும் பணியாற்றவில்லை என கூற முடியாது' எனவும், முதல் அமர்வு தெரிவித்தது.