உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., கொடிக்கு எதிரான வழக்கு; தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

த.வெ.க., கொடிக்கு எதிரான வழக்கு; தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த, விஜயின் த.வெ.க., கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கொடியானது, சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் அமைந்துள்ளது. இதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, 'நாங்கள் 2023ல் பதிவு செய்த எங்கள் சபை கொடியை பயன்படுத்துவது, வணிக சின்ன சட்டத்தையும், பதிப்புரிமை சட்டத்தையும் மீறிய செயல். 'இரு கொடிகளும் ஓரளவு ஒற்றுமையாக இருப்பதால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த, த.வெ.க.,வுக்கு தடை விதிக்க வேண்டும்' என பச்சையப்பன் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, 'மனுதாரரின் சபையோ, த.வெ.க.,வோ எவ்வித வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதால், வணிக சின்னம், பதிப்புரிமை சட்டம் இதில் பொருந்தாது. 'இரு கொடிகளும் முற்றிலும் வேறுபாடு கொண்டவை. த.வெ.க., கொடியால் எப்படி இழப்பு ஏற்பட்டது என்பதை மனுதாரர் விளக்கவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, த.வெ.க., தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'இரு கொடிகளையும் ஒப்பிடும்போது, மனுதாரரின் சபை கொடியை, த.வெ.க., பயன்படுத்தியதாக கூற முடியாது. 'மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்றும் சொல்ல முடியாது. இதனால், சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிற கொடியை பயன்படுத்த, த.வெ.க.,வுக்கு தடை விதிக்க முடியாது. 'தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !