பிராமணர் உண்ணாவிரதம் ஐகோர்ட் அனுமதி உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை:பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற அரசை வலியுறுத்தி, மதுரையில் நாளை நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியளித்தது.ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் தாக்கல் செய்த மனு:பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, நாளை மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரப்பட்டது.மேலும், கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி போலீஸ் கமிஷனர், சுப்பிரமணியபுரம் போலீசாரிடம் மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எம்.நிர்மல் குமார் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: உண்ணாவிரதத்தில் பேச்சாளர்கள் பிற மதம், சமூகங்களை புண்படுத்தும் வகையில் பேச மாட்டார்கள். எந்த நோக்கத்திற்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறதோ அதை மையப்படுத்தி மட்டுமே பேசுவர். சட்டத்திற்கு உட்பட்டு அமைதியான முறையில் நடத்தப்படும்.இவ்வாறு உத்தரவாதம் தாக்கல் செய்தது. இதை பதிவு செய்த நீதிபதி, உண்ணாவிரதத்திற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.