டி.ஐ.ஜி.,வருண்குமாருக்கு எதிராகநடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: வழக்கில் பறிமுதல் செய்த தனது அலைபேசியிலிருந்த ஆடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் வெளியிட்டதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை கோரியும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி தாக்கல் செய்த வழக்கில்,மனுதாரர் அனுப்பிய மனுவை டி.ஜி.பி.,பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தாக்கல் செய்த மனு: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதுாறு பரப்பும் வகையில் பாடல் பாடியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் என் மீது வழக்கு பதிந்தனர். 2024 ஜூலை 11 ல் என்னை கைது செய்தனர். அப்போது என்னிடமிருந்து 2 அலைபேசிகளை பறிமுதல் செய்தனர். அவற்றில் கட்சி நிர்வாகிகளுடன் நான் பேசிய ஆடியோ பதிவுகள் இருந்தன. அவை சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அப்போதைய திருச்சி எஸ்.பி.,வருண்குமார் (தற்போது டி.ஐ.ஜி.,) அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எனது அலைபேசிகளிலிருந்த ஆடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பரவச் செய்தார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக எனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவர் உட்பட சிலர் தவறாக இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். வருண்குமார் உள்ளிட்ட சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை கோரி டி.ஜி.பி.,க்கு புகார் மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.தனபால்: மனுவை டி.ஜி.பி.,ஒரு மாதத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.