உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்மாணிக்கவேலுக்கு எதிராக சி.பி.ஐ., பதிந்த வழக்கு ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு

பொன்மாணிக்கவேலுக்கு எதிராக சி.பி.ஐ., பதிந்த வழக்கு ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ., பதிந்த வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்து 2018ல் ஓய்வு பெற்றார். பணியின்போது சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூர் டி.எஸ்.பி., காதர்பாஷா மீது வழக்கு பதிந்தார். காதர்பாஷா,'தீனதயாளனை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்நீதிமன்றம், 'சி.பி.ஐ., விசாரித்து முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது. பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிந்தது. ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்.சி.பி.ஐ., வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பொன்மாணிக்கவேல் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சிலை கடத்தல் வழக்குகளை கையாள சிறப்பு அதிகாரியாக மனுதாரரை உயர்நீதிமன்றம் நியமித்தது. விசாரணையை கையாள்வதில் தனது குழு எதிர்கொள்ளும் சிரமங்களை விவரிக்கும் ஒரு பிரமாண பத்திரத்தை மனுதாரர் தாக்கல் செய்திருந்தார்.சிறப்பு அதிகாரியாக இருந்த மனுதாரர் குற்றம் சாட்டப்பட்டவராக மாற்றப்பட்டார். ஹீரோவாக கருதப்பட்ட ஒருவர் தற்போது வில்லனாக மாற்றப்பட்டுள்ளார். இங்கு வழக்கு நிலுவையில் இருந்தபோது, மதுரை கீழமை நீதிமன்றத்தில் சி.பி.ஐ., ​​குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சி.பி.ஐ.,தரப்பு,'மனுதாரர் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யும் வகையில் திருத்த மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை, ' என தெரிவித்தது.இத்தகைய தொழில்நுட்பங்கள், சிறப்பு சூழ்நிலைகள் ஒரு வழக்கில் நீதியின் போக்கைத் தடுக்க அனுமதிக்க முடியாது. எப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி மனுதாரர் தாக்கல் செய்த மனுவை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி வெறுமனே பைசல் செய்துவிட முடியாது. குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரு ரகசிய அல்லது சிறப்புரிமை ஆவணமாக கருதப்பட்டால், ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் நகலை வழங்க மறுப்பது ஏற்புடையது. அவ்வாறு சி.பி.ஐ., குறிப்பிடவில்லை.குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்களை குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு வழங்குவது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல. இயற்கை நீதியின் கொள்கைப்படி சரியானதே. எப்.ஐ.,ஆரை ரத்து செய்யும் நடவடிக்கைகளை துவங்க அவருக்கு உரிமை உண்டு. அடிப்படைத் தகவல் இல்லாத நிலையில் அதை அவரால் சரியாக பயன்படுத்த முடியாது. தீனதயாளனிடமிருந்து வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி பெற்றதாகவும், அவர் உட்பட மேலும் சிலரது வாக்குமூலம் காதர்பாட்ஷாவை வழக்கில் சிக்க வைக்க அடிப்படையாக இருந்ததாகவும், சிலரது வாக்குமூலம் ஜோடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.தீனதயாளன் தற்போது உயிருடன் இல்லை. பொறுப்பான விசாரணை அதிகாரியால் தாக்கல் செய்யப்படும் எந்தவொரு குற்றவியல் வழக்கிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரது மனுவின் அடிப்படையில் அனைத்து ஆவணங்களும் தவறானவை; அதற்காக விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடர வேண்டும் என நீதிமன்றம் கருதினால், எந்தவொரு போலீஸ் அதிகாரியும் விசாரணை அதிகாரியாக தனது கடமையை நிறைவேற்றும் வகையில் வழக்கை விசாரிக்க முன்வரமாட்டார்.ஏனெனில் எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபரும் விசாரணை அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தி விளையாடலாம். அது அந்த அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை துவங்கும் அளவிற்கு செல்லக்கூடும். மனுதாரருக்கு எதிராக பதிந்த எப்.ஐ.ஆர்., மட்டுமல்ல; குற்றப்பத்திரிகையும் சட்டப்பூர்வத் தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக எந்த முக்கிய விபரமும் எப்.ஐ.ஆரில் இல்லை. மனு அனுமதிக்கப்படுகிறது. எப்.ஐ.ஆர்., ரத்து செய்யப்படுகிறது. குற்றப்பத்திரிகை அடிப்படையில் இதர மேல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு தற்போது வழங்கிய பெரிய நிவாரணத்தைக் கருத்தில் கொண்டு ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை கோரிய மனு மீதான விசாரணை முடிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

rvs
செப் 28, 2025 14:18

Honourable Madurai High Court Judge has given a judgment that is very clear and provided justice to Mr Ponmanikavel. The same judge has delivered so many important judgments effectively in many cases.


sundar
செப் 28, 2025 10:09

அரசு ஊழியர்கள் மேல் அவருடைய வேலைகள் சம்பந்தமாக Sanction for Prosecution என்று (Cr.PC 197 என்று நினைவு ) மேல் அதிகாரிகளின் ஒ‌ப்புத‌ல் இ‌ல்லாம‌ல் கோர்ட் கேஸ் போடுவது கஷ்டம்.


V Venkatachalam
செப் 28, 2025 09:29

நீதிபதி குறிப்பிட்ட மிக முக்கியமான அம்சம் எந்த ஒரு விசாரணை அதிகாரி மீதும் வழக்கு போட்டால் வரும் காலங்களில் எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் விசாரணை அதிகாரியாக தனது கடமையை நிறைவேற்றும் வகையில் விசாரிக்க முன் வரமாட்டார். இது அப்பட்டமான உண்மை. அதை குறிப்பிட்ட நீதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். எப் ஐ ஆர் ஐ ரத்து மற்றும் மேல் நடவடிக்கைகளை ரத்து செய்து பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கியது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.‌ சாமி சிலைகளை திருடுறவன்களுக்கு என்ன தண்டனை. அது பப்ளிக் ல் தெரிய வேண்டும். கடவுள் நிச்சயம் தண்டிக்கிறார்.அது கண்ணுக்கு தெரிவதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை