ஆங்கிலம், தமிழில் பிழையின்றி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை,:'ஜாதி சான்றிதழ்களில், சமூக பெயர்களை, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாக பிழையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் நல அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.குகேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:என் மகளுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு, சென்னை மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். கடந்தாண்டு ஜனவரி, 17ல் வழங்கிய ஜாதி சான்றிதழில், 'இசை வேளாளர்' என்பதை, தமிழில், 'இசை வெள்ளாளர்' என, குறிப்பிட்டு உள்ளனர். ஜாதி இல்லை
தமிழில், 'இசை வெள்ளாளர்' என தவறாக குறிப்பிட்டு வழங்கியது குறித்து, உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில், 'இசை வெள்ளாளர்' என்ற ஜாதி இல்லை. அவ்வாறு இருக்கும்போது, 'இசை வேளாளர்' என்பதை, 'இசை வெள்ளாளர்' என்று குறிப்பிட்டு, ஜாதி சான்றிதழ் வழங்குகின்றனர்.இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலர், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் செயலர் மற்றும் மாம்பலம் தாலுகா துணை தாசில்தாருக்கு, கடந்தாண்டு ஜூன் 8ல் மனு அளித்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து, மகளின் ஜாதி சான்றிதழில் தமிழ், ஆங்கிலத்தில் பிழையின்றி, ஒரே மாதிரியாக ஜாதி பெயரை குறிப்பிட்டு வழங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ஆர்.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.சக்திவேல் ஆஜராகி, ''தமிழக அரசின் அரசிதழில், 'இசை வேளாளர்' என்பது, ஆங்கிலத்தில் இசை வெள்ளாளர் என்று உள்ளதால், அதன் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது,'' என்றார்.அதைக் கேட்ட நீதிபதிகள், 'இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்' என, கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், 'பாதிப்பில்லை என்றாலும், ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது, எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஜாதி சான்றிதழ்களில், சமூகத்தின் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வேறுவேறாக இருக்கக் கூடாது' என்று கூறப்பட்டது. அதிகாரிகளின் கடமை
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அரசிதழில் குறிப்பிட்டுள்ளபடி, ஆங்கிலம் மற்றும் தமிழில், ஜாதி சான்றிதழில், சமூகத்தை சரியாக குறிப்பிட்டு வழங்க வேண்டியது, அதிகாரிகளின் கடமை. ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது, ஜாதி சான்றிதழில் எழுத்துப் பிழை அல்லது மாற்றம் இருக்கக் கூடாது. எனவே, அரசிதழில் குறிப்பிட்டுள்ளபடி சமூக பெயரை, தமிழ், ஆங்கிலம் என, இரு மொழிகளிலும் சரியாக குறிப்பிட்டு, ஜாதி சான்றிதழ்களை வழங்கப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு பிழையும் சம்பந்தப்பட்ட நபரின் நலனுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் பிழை இருந்தால், அதை அதிகாரிகள் சரிசெய்து வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.