உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.பி.எப்., வேலை வாங்கி தருவதாக மோசடி: இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேருக்கு சிறை

ஆர்.பி.எப்., வேலை வாங்கி தருவதாக மோசடி: இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேருக்கு சிறை

மதுரை : ஆர்.பி.எப்., போலீசில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி சிலரிடம் பணம் பெற்று போலி பணி நியமன உத்தரவு மூலம் மோசடியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனைவிதித்தது.சென்னை போரூர் செந்தில்குமார் 49, தங்கம் 63, அம்பத்துார் பாஸ்கரன் 63, அயனாவரம் ஜாய்சன் 72, விருதுநகர் மாவட்டம் கட்டயதேவன்பட்டி காளிதாஸ் 59. இவர்கள் ரயில்வே பாதுகாப்பு (ஆர்.பி.எப்.,) படையில் எஸ்.ஐ., மற்றும் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக்கூறி சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி நியமன உத்தரவுகள் தயாரித்து வழங்கி ஏமாற்றி மோசடி செய்ததாக 2010ல் சி.பி.ஐ., வழக்கு பதிந்தது.மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அந்நீதிமன்றம் செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேரை 2017ல் விடுதலை செய்தது. அதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பு உயர்நீதிமன்றக்கிளையில் மேல்முறையீடு செய்தது.நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேர்ந்து சதி செய்து, வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்ற போர்வையில் தொகையை பெற்றுள்ளனர்.ரயில்வே துறையின் போலி முத்திரையுடன் போலி ஆவணங்களை வழங்கியுள்ளனர். தேர்வு அனுமதி அட்டை உள்ளிட்ட பல்வேறு போலி ஆவணங்களை சேகரித்து சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. அனைத்து அம்சங்களிலும் குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இருந்தபோதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. வேலையற்ற இளைஞர்கள் ஏமாற்றுக்காரர்களிடம் எளிதில் இரையாகின்றனர்.அவர்களின் பாதகமாக சூழ்நிலைகளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.ஆதாரங்களை சரியான முறையில் கீழமை நீதிமன்றம் பரிசீலித்திருக்க வேண்டும்.அந்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. செந்தில்குமார், தங்கம், பாஸ்கரன், ஜாய்சன், காளிதாசுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார். இதில் ஜாய்சன் சென்னையில் ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டராகவும், பாஸ்கரன் ஆர்.பி.எப்.,பிலும் பணிபுரிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
மார் 23, 2025 06:09

நீதி அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். 10 ரூபாய்க்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்பது அநீதியே.


சமீபத்திய செய்தி