உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மரணத்திற்கு சான்று நிராகரிப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு

மரணத்திற்கு சான்று நிராகரிப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் கொண்டு வருவதற்கு முன் ஏற்பட்ட மரணத்தை பதிவு செய்ய முடியாது என நிராகரித்த ஆர்.டி.ஓ.,வின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே கீழக்கோட்டை அர்ஜூனன் தாக்கல் செய்த மனு: அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து 2005 ல் ஓய்வு பெற்றேன். எனது தந்தை ராமசாமி 1961ல் இறந்தார். அவருக்கு நான் உட்பட 6 பேர் சட்டப்பூர்வ வாரிசுகள். தந்தையின் மரணத்தின்போது நான் சிறுவனாக இருந்ததால் இறப்புச் சான்றிதழை உரிய நேரத்தில் பெறமுடியவில்லை. ஒரு கோயிலை எங்கள் குடும்பத்தினர் நிறுவினர். அக்கோயிலுக்கான வருவாய்த்துறை ஆவணங்கள் மூதாதையர்களின் பெயர்களில் உள்ளன. வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றம் செய்வதற்காக எனது தந்தையின் இறப்புச் சான்று பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சான்று கோரி தேவகோட்டை ஆர்.டி.ஓ.,விடம் 2019 ல் விண்ணப்பித்தேன்.பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் கொண்டுவருவதற்கு முன் தந்தை இறந்ததால், அதை பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை எனக்கூறி நிராகரிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000 ன்படி இறப்புச் சான்று வழங்க கலெக்டர், ஆர்.டி.ஓ.,விற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: சட்டம் வருவதற்கு முன் இறந்த ஒருவருக்கு சட்டப்படி சான்று வழங்க எந்தத் தடையும் இல்லை.அரசு தரப்பு: இச்சட்டம் தமிழகத்தில் 1970 ஏப்.,1ல் நடைமுறைக்கு வந்தது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன் ஏற்பட்ட மரணத்தை பதிவு செய்ய முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

காலனி ஆட்சியில் சட்டம்

நீதிபதி: காலனித்துவ ஆட்சிக்கு முன் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடு எதுவும் இல்லை. காலனித்துவவாதிகளால் பிறப்பு, இறப்புகளை தன்னார்வ அடிப்படையில் பதிவு செய்வதற்காக ஒரு சிவில் பதிவு முறை கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து 1886 ல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சட்டம் சட்டமாக்கப்பட்டது. இது 1888 அக்.,1ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டமும் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கவில்லை. இதன் நோக்கம் எந்தவொரு குறிப்பிட்ட சட்டத்திற்கும் உட்படாத கிராமப்புறங்களில் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை உருவாக்குவதாகும். இறப்பு குறித்து பதிவாளருக்குத் தெரிவிக்காவிடில் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருந்தாலும், அது அரிதாகவே பின்பற்றப்பட்டது.

புது சட்டம்

நாடு முழுவதும் நிலவிய பல்வேறு சட்டங்களை கருத்தில் கொண்டு, மத்திய அரசு 1969 ல் பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தை கொண்டுவந்தது. ஒருவரின் இறப்பு குறித்து பதிவாளரிடம் தெரிவிப்பது, அனைத்து விபரங்களையும் வழங்குவது தற்போது கட்டாயமாகிவிட்டது. இச்சட்டப்பிரிவின்படி 1886 சட்டம் ரத்து செய்யப்பட்டது.ஒரு வீட்டில் மரணம் ஏற்பட்டால் அந்த வீட்டின் தலைவரே பதிவாளரிடம் தகவல் அளிக்க அங்கீகரிக்கப்படுகிறார். அவர் இல்லாத நிலையில், அக்காலகட்டத்தில் அங்கு வசிக்கும் மூத்த நபர் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஓராண்டிற்குள் பதிவு

தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000 ன்படி எந்தவொரு பிறப்பு அல்லது இறப்பையும் அது நிகழ்ந்த ஓராண்டிற்குள் பதிவு செய்ய வேண்டும்.இல்லையெனில் ஆர்.டி.ஓ.,பதவிக்குக் குறையாத நிர்வாக நீதிபதியின் உத்தரவின் மூலம் ரூ.500 தாமதக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். மனுதாரர் 1947 ல் பிறந்தார். அவரது தந்தை இறந்த 1961 ல் மனுதாரர் 14 வயது சிறுவனாக இருந்திருப்பார். மூத்த சகோதரர் தந்தையின் மரணத்தை பதிவு செய்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு செய்யவில்லை.மனுதாரர் ஆசிரியராக பணிபுரிந்ததால் தந்தையின் மரணத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஓய்வு பெற்ற பின் வருவாய் பதிவேடுகளை மாற்றியமைக்க வேண்டியிருந்ததால்​இறப்புச் சான்றின் அவசியம் எழுந்தது. உடனடியாக, அவர் மனு செய்தார்.அது 6 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் நிலுவையில் இருந்தது.பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் கொண்டுவருவதற்கு முன் ஏற்பட்ட மரணத்தை பதிவு செய்ய முடியாது எனக்கூறி, நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தாமத கட்டணமாக ரூ.500 ஐ மனுதாரர் செலுத்த வேண்டும். ஆர்.டி.ஓ.,விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

KRISHNAN R
ஏப் 12, 2025 10:01

ஆன்லைன்...ஆஃப் லைன்... எதுவும் சர்வரது...


visu
ஏப் 12, 2025 08:15

எல்லாவற்றையும் ஆன்லைன் பதிவு செய்யும் முறையை கொண்டு வாருங்கள் அவங்க விசாரித்து என்ன காரணம் ஏற்க மறுக்க என்று பதிவு செய்தால் ஊழல் குறையும் .


GMM
ஏப் 12, 2025 08:10

பிறப்பு இறப்பு சட்டம் வருமுன் இறந்தவரை நிர்வாக நீதிபதி பதிய முடியாது? இறப்பு சான்று இல்லை என்றாலும் வாரிசு சான்று மனுதாரர் ஆவண அடிப்படையில் தாசில்தார் வழங்க முடியும். உயிர் உள்ள வாரிசு, வயது, உறவுமுறை, திருமண நிலை மற்றும் இறந்த வாரிசு விவரம் இருக்கும். இதில் தவறை திருத்த 1 ஆண்டுக்குள் ஆர் டி.ஓ. விடம் மனு செய்ய வேண்டும். இது போன்ற சான்று வேலைக்கு நாடு முழுவதும் தேவை. இந்திய அரசு, தமிழ்நாடு மாநிலம் என்று இருப்பது அவசியம். மேலும் சட்ட, விதி எண் அவசியம். தற்போதய சான்றில் இல்லை.இவைகள் சான்று உத்தரவில் கட்டாயம் இருக்க ஆவண வேண்டும்.


Kasimani Baskaran
ஏப் 12, 2025 06:49

ஒருவர் இறந்ததை பதிவு செய்யவில்லை என்றால் வாரிசு சான்றிதழ் பெறுவது சிக்கலானது. எளிமையான விஷயங்களைக்கூட காசடிக்க வசதியாக சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறது மாநில நிர்வாகம். எங்கும் பணம் என்பது மிக சோகமானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை