உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சிலைகளை கரைப்பதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

விநாயகர் சிலைகளை கரைப்பதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை:'விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நிறுவவும், வழிபாடு நடத்தவும், நீர்நிலைகளில் கரைக்கவும், நாளை வரை போலீசார், ஆர்.டி.ஓ., உள்ளிட்டோர் அனுமதி வழங்க வேண்டும் என, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 25க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கலாகின. அவற்றை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். சில மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மத சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்றவை அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப் பட்ட உரிமைகள். எனினும் மற்ற நபர்களுக்கோ, இயற்கை சூழலுக்கோ தீங்கு விளைவிக்காத வகையில் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். மத்திய - மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்களின் பரிந்துரைப்படி களிமண், இயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நிறுவவும், கரைக்கவும் வேண்டும். மேடையுடன் சேர்த்து சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. மற்ற மதம் சம்பந்தப்பட்ட இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகள் அமைக்கக்கூடாது. கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட அரசின் உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். சிலைகளை நிறுவுபவர்கள் குறைந்தது ஒரு மாதம் முன்னரே அனுமதி பெற வேண் டும். எனவே, தாமதமாக கோரப்பட்ட அனுமதிகள் நிராகரிக்கப்படலாம். மாசு கட்டுப்பாடு வாரியத்திடம், 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களால் தயாரானவை' எனும் சான்று பெற்ற சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி உண்டு. இதனால், நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படும். சான்று இல்லாதபட்சத்தில் செயற்கை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பொறுப்பானதாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாததாகவும் இருக்க வேண்டும். வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ