உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் பணியாளர்கள் நியமனம் எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் பணியாளர்கள் நியமனம் எப்போது உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் 624 பேர் எவ்வளவு காலவரம்பிற்குள் நியமிக்கப்படுவர் என தமிழக சுகாதாரத்துறை செயலர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை ஆனந்த்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மற்றும் பயிற்சி மாணவர்கள் மூலம் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதற்கு போதிய நிரந்தர தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை. தகுதியற்ற பணியாளர்கள் மூலம் தரமற்ற டயாலிசிஸ் சிகிச்சையால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2015ல் தவறான டயாலிசிஸ் சிகிச்சையால் 16 நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டது. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 பேர் இறந்தனர்.மதுரை அரசு மருத்துவமனையில் 60 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. இதை கையாள 20 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவை; 4 தற்காலிக பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விதிகள்படி 624 தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்க வேண்டும். தற்போது 160 பேர் மட்டுமே தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். மருத்துவக் கல்வி இயக்குனரகம் டயாலிசிஸ்தொழில்நுட்ப பணியிடங்களில் 624 பேரை நிரந்தரமாக நியமிக்க சுகாதாரத்துறைக்கு 2023ல் பரிந்துரைத்தது. டயாலிசிஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நிரந்தர தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்கக்கோரி தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: 624 பணியாளர்கள் எவ்வளவு காலத்திற்குள் நியமிக்கப்படுவர் என சுகாதாரத்துறை செயலர் அக்.,28ல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 22, 2024 12:14

ஐயா திரு கோர்ட்டார் அவர்களே, இன்று திமுக அரசு இருக்கும் நிலையைப்பார்த்தால், அரசுக்கே டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் போல தோன்றுகிறது. நீங்கள்தான் ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும். That is all your Honour.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை