நாகர்கோவில் சி.எஸ்.ஐ., கூட்டத்தில் நீதிபதியை தாக்க முயற்சி கிறிஸ்தவ மறை மாவட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு
மதுரை:நாகர்கோவிலில் நடந்த சி.எஸ்.ஐ., மறை மாவட்ட கவுன்சில் கூட்டத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபனை தாக்க முயற்சி நடந்ததால், சி.எஸ்.ஐ.,யின் 10 உறுப்பினர்களுக்கு எதிராக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தண்டனை அளிப்பது குறித்து கேள்வி எழுப்ப விசாரணையை ஒத்திவைத்தது. நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லுாரி செயலராக, பிஜு நிஜேத் பால் நியமிக்கப்பட்டார். இதற்கு கன்னியாகுமரி மறைமாவட்ட சி.எஸ்.ஐ., பிஷப் தடை விதித்தார். இதற்கு எதிராக பிஜு நிஜேத் பால், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.கடந்த 2024 அக்டோபரில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரை கல்லுாரியின் செயலராக தேர்ந்தெடுத்தது, மறை மாவட்டத்தின் நடைமுறைக்கு எதிரானதா என்பது மறை மாவட்ட கவுன்சிலால் தீர்மானிக்க வேண்டிய விஷயம். மறை மாவட்ட கவுன்சில் கூட்டம் நடத்த, 2 மாதங்களுக்குள் பிஷப் அழைப்பு விடுக்க வேண்டும். 'பிஷப்பின் உத்தரவிற்கு ஏற்கனவே இந்த நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீட்டிக்கப்படுகிறது' எனக் கூறி இருந்தார். இதை எதிர்த்து, பிஜு நிஜேத் பால் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.சர்ச்சையை தீர்க்கும் வகையில், மறை மாவட்ட கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் ஓட்டுப் பதிவு முறையை கண்காணிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபனை குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பி.மோகன்ராஜை உறுப்பினராக நியமித்து உத்தரவிட்டது.கடந்த 2024 நவ., 16ல் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லுாரியில் சிறப்பு கூட்டம் நடந்தது. அதில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து, குழுவின் இரு நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு உத்தரவு:அமைதியான முறையில் தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட நீதிபதி பார்த்திபனை, தாக்க முயற்சி நடந்துள்ளது. அவருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, அநாகரிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறப்புக் கூட்டத்தின் வீடியோ பதிவை பார்த்தோம்.கூட்டத்தினரிடையே உரத்த, கோபமான குரல்கள் எழும்பின. சில உறுப்பினர்கள், நீதிபதி பார்த்திபனின் இருக்கைக்கு அருகே சென்று அவரது முகத்தில் முஷ்டியை காண்பித்து மிரட்டுவதைக் கண்டோம்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுவினரை மிரட்டி, தாக்க முயற்சித்தது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையாகும்.மறை மாவட்ட உறுப்பினர்களான டாக்டர் ஜெயலால், வழக்கறிஞர் டேவிட் கென்னடி, எபனேசர், ராபின் எட்வர்ட், ஜேக்கப், ஜெயஹர் ஜோசப், ஷாபு சி.பெனட், எமில் ஜெபசிங், ஜான் பின்னி, ஜான் லீபன் மிரட்டும், அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறியுள்ளனர். இவர்கள் மீது தானாக முன்வந்து குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளை துவக்கியுள்ளோம். அவர்களின், மன்னிப்பை நாங்கள் ஏற்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படி அவர்கள் குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கருதப்படுகிறது. தண்டனை அளிப்பது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்ப, இவ்வழக்கை பிப்., 14ல் பட்டியலிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.