உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தர்மபுரியில் கனிமவள கொள்ளை அதிகரிப்பு; உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

 தர்மபுரியில் கனிமவள கொள்ளை அதிகரிப்பு; உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வரும் கனிமவள கொள்ளை விவகாரத்தில், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், கலெக்டர் மீது வழக்கு பதியப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், 'குவார்ட்ஸ்' கனிமங்கள், பென்னாகரம் தாலுகா கெண்ரமணஹள்ளி; அரூர் தாலுகா, வேலம்பட்டியில் அதிகளவில் உள்ளன. 'டோலிரைட்' எனும் கருப்பு கிரானைட் கற்களும் கிடைக்கின்றன. பைராக்சின், பெல்ஸ்பார், மேக்னசைட் கனிமங்களும் உள்ளன. இக்கற்களுக்கு வரவேற்பும், விலையும் மிகவும் அதிகம். ராக்கெட் மற்றும் விமானங்களின் மேற்தகடுகள் தயாரிக்க பயன்படும், 'மாலிப்டினம்' கனிமம், தர்மபுரி மாவட்டம் அரூர், அதன் சுற்றுப்புற கிராமங்களில் பூமிக்கு அடியில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனுமதியின்றி குவாரிகள் செயல்படுகின்றன. அங்கு முறையாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவது இல்லை. அளவு மீறி, 150 அடி ஆழத்துக்கு மேல் கற்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. முழு பொறுப்பு தொப்பூர், அரக்காசனஹள்ளி, சின்னம்பள்ளி, பாலக்கோடு உட்பட பல்வேறு இடங்களில் மலைகளை குடைந்தும், புறம்போக்கு நிலங்களிலும், அதல பாதாளத்துக்கு கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதில், பல கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத சுரங்க பணிகளை தடுக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், நடேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பிரமணியம், குமரப்பன் அடங்கிய அமர்வு முன் டிச., 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கடந்த, 2020 -- 2025 நவம்பர் வரை, 1,439 சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகள் கண்டறியப்பட்டிருந்தாலும், 135 குற்றவியல் வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 24 தனியார் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களாக, அரசு தரப்பில், 'சுரங்க சட்டம் மற்றும் விதிகளில், குற்றவியல் புகார் அளிக்க, ஆர்.டி.ஓ., தகுதியான அதிகாரி என்பதால், சுரங்கத்துறையில் புகார் அளிக்க முடியவில்லை' என, கூறப்படுகிறது. ஆர்.டி.ஓ., புகார் அளிக்க தவறினால், அவருக்கு எதிராக சுரங்கத்துறை கமிஷனர் புகார் அளித்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத சுரங்க நடவடிக்கைக்கு, கலெக்டரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு அவர்களே பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். புகார் அளிக்க வருபவர்களுக்கும், பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த பொறுப்புகளில் இருந்து நடவடிக்கை எடுக்க தவறினால், சம்பந்தப்பட்ட கலெக்டர் மீது வழக்கு தொடரப்படும். சட்ட விரோத சுரங்க செயல்பாடுகளில், அரசியல், நிர்வாகத்துறை மற்றும் சுரங்க குத்தகைதாரர்கள் இடையே முக்கோண தொடர்பு உள்ளது. 'மாபியா' வடிவில் பணபலம், அரசியல் அதிகாரத்துடன் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட குற்றமாக மாறியுள்ளது. கனிமங்களை சுரண்டும் பேராசை கொண்ட எந்த ஒரு நபரும், எந்த சலுகையும் வழங்கப்படாமல் இரும்பு கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை தலைமை செயலர் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி, வருவாய், போலீஸ், சுரங்கத்துறை ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை