அரசின் செலவையும், துாரத்தையும் குறைக்கவே நெல்லை புறவழிச்சாலை வழித்தடத்தில் மாற்றம் நெடுஞ்சாலை துறை விளக்கம்
சென்னை:'திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை திட்டத்திற்காக, எந்த ஒரு தனிநபர் நிலத்தையும் பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. அரசின் செலவை குறைக்கும் நோக்கில் தான், இப்பணி திட்டமிடப்பட்டு உள்ளது' என, மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு தலைமை பொறியாளர் விமலா கூறியுள்ளார்.திருநெல்வேலி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மதுரை - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில், கொங்கந்தான்பாறை விலக்கு முதல் தாழையூத்து வரை, மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் மொத்த நீளம், 32 கிலோ மீட்டர். இச்சாலை அமைக்கப்பட்டால், அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், திருநெல்வேலி நகருக்குள் நுழையாமல், நேரடியாக மதுரை அல்லது நாகர்கோவில் நெடுஞ்சாலைக்கு செல்ல முடியும். கடந்த 2016ல் திட்டமிடப்பட்ட இப்பணிகளை, 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள, நெடுஞ்சாலைத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை சாலையில் தாழையூத்து புது காலனியை கடந்து, நாரணம்மாள்புரம் வடக்கு பகுதியில் சாலை ஆரம்பமாகும். இந்த இடத்தில், மதுரையைச் சேர்ந்த ஆளுங் கட்சி முக்கிய பிரமுகருக்கு சொந்தமான நிலம் உள்ளது. எனவே, திட்ட வழித்தடத்தை மாற்றி, தாழையூத்து இந்தியா சிமென்ட்ஸ் ஆலைக்கு அருகில் உள்ள பண்டாரகுளம் பகுதியில் சாலை பணியை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.இதுகுறித்து, நம் நாளிதழில், 'தடம் மாறும் நெல்லை மேற்கு புறவழிச்சாலை' என்ற தலைப்பில் விரிவான செய்தி நேற்று முன்தினம் வெளியானது. ஆனால், திட்ட வழித்தடத்தை மாற்றி அமைப்பதன் வாயிலாக, சாலையின் நீளம் மற்றும் செலவு குறையும் என, நெடுஞ்சாலை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு தலைமை பொறியாளர் விமலா வெளியிட்டுள்ள அறிக்கை:திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை தொடர்பாக, 2022 செப்டம்பரில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்த சாலையின் பழைய திட்ட அறிக்கைப்படி, ஒரு குறிப்பிட்ட பகுதி, தொழில் வகை நிலங்களின் வழியே செல்வதாக இருந்தது. இதனால், நிலம் எடுப்பிற்கு தேவைப்படும் செலவு அதிகமாக இருந்தது. மேலும், மதுரை - கன்னியாகுமரி சாலையில், புதிதாக ஒரு வாகன சுரங்கப்பாதை அமைக்க வேண்டி இருந்தது. இதற்கும் செலவு அதிகமாகும் நிலை ஏற்பட்டது. தற்போது, மாற்றி அமைக்கப்பட்ட புதிய வழித்தடத்தின் வாயிலாக, சாலையின் நீளம் குறைந்துள்ளது; நில எடுப்பு பரப்பளவும் குறைந்துள்ளது. இதனால், செலவும், தனியார் நிலத்திற்கு தர வேண்டிய இழப்பீட்டு தொகையும் குறைந்துள்ளது. புதிதாக வாகன சுரங்கப்பாதை அமைப்பதும் தவிர்க்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த வழித்தடத்தில், ஏற்கனவே உள்ள பழைய சுரங்கப்பாதையையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், அரசுக்கு 60 கோடி ரூபாய் மிச்சமாகிறது. இந்த காரணங்களுக்காக தான், புறவழிச்சாலை வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதே தவிர, எந்த ஒரு தனிநபர் நிலத்தையும் பாதுகாக்கும் முயற்சிக்காக அல்ல; அதற்கு அவசியமும் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.