உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலகத்தை வழி நடத்துவதே இந்துத்துவாவின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

உலகத்தை வழி நடத்துவதே இந்துத்துவாவின் நோக்கம்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''இந்துத்துவாவின் நோக்கம், மற்ற நாடுகளை பிடிப்பதல்ல. உலகத்தை முன் நின்று அனைவரையும் வழி நடத்துவது தான்,'' என்று, கோவையில் நடந்த விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.பேரூர் ஆதினம் ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நூற்றாண்டு விழா, கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், நடந்தது. இதையொட்டி உலக நலன் வேண்டி, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர், ராமலிங்கேஸ்வரருக்கு வேள்வி நடத்தினர். இதையொட்டி பேரூர் மடத்திற்கு வருகை தந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மடத்தில் உள்ள சாந்தலிங்கர் சன்னதியில் வழிபாடு செய்தார். உலக நலனுக்காக நடந்த வேள்வியில் கலந்து கொண்டார். தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், தன் கைகளால், ராமலிங்கேஸ்வரருக்கு, பஞ்சபூத ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் மற்றும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்,பால் தயிர், தேன், பழ வகைகள், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீறு ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்தார். அதன்பின், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகளுக்கு, பக்தர்கள் பாத பூஜை செய்தனர். தொடர்ந்து, ராமலிங்கேஸ்வரருக்கு அலங்கார பூஜை மற்றும் வேண்டுதல் வழிபாடு நடந்தது. இத்துடன், சிவ வேள்வி வழிபாடு நிறைவடைந்தது.அதன்பின் நடந்த ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில், விழாவின் முக்கியத்துவம் குறித்து சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பேசினார். தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து. 7 நிமிடமும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் குறித்தும், பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் குறித்தும், 2 நிமிடமும் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ராகுல்ராஜா நூற்றாண்டு விழாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் சிறப்புரையாற்றினார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சின்மயா மிஷன் மித்ரானந்தா ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இதில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பின், பேரூர் படித்துறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டபத்தை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் நேரில் பார்வையிட்டு, பேரூர் படித்துறையின் பெருமைகளை குறித்து கேட்டறிந்தார். அதன்பின், விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புதுடில்லிக்கு புறப்பட்டு சென்றார்.இவ்விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசுகையில், 'அனைவரும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாரத நாடு, இமயமலையின் இரு கரங்கள் மற்றும் கடல்களால் சூழப்பட்டுள்ளது. இந்த மண்ணின் இன்றியமையாத தன்மை, உலகிற்கு தேவைப்படும் போதெல்லாம் தர்மத்தை வழங்க வேண்டும் என்ற புனிதமான கடமையுடன் இணைந்துள்ளது.உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நாம் உலகில் இருக்கும் அனைவருடனும் நட்புடன் இருக்கிறோம். அவர்களுக்கு இந்த உண்மையை கற்றும் தருகிறோம். பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறோம். இந்துத்துவாவின் நோக்கம், மற்ற நாடுகளை பிடிப்பதல்ல. உலகத்தை முன் நின்று அனைவரையும் வழி நடத்துவது தான்.சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தற்சார்பு பொருளாதாரம், குடும்பங்களை பேணுதல் உள்ளிட்ட சங்கம் மேற்கொள்ளும் ஐந்து முக்கிய பணிகளை, பேரூர் ஆதினமும் மேற்கொண்டு வருவது தெரிகிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும், 'என்றார்.ஆர்.எஸ்.எஸ்., தலைவருக்கு வேல்பேரூர் மடத்தில் நடந்த விழாவில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கு ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் ஆகியோர், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கு, வெள்ளியிலான வேல் மற்றும் சிறிய முருகன் சிலையை பரிசளித்தனர். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வேல் வழங்கினார். சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகளுக்கு, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வேல் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Palanisamy T
ஜூன் 24, 2025 14:39

இந்து தத்வா என்ற உங்கள் பாதையே தெளிவாகயில்லை. என்றும் இருக்க முடியாது. நீங்கள் எப்படி உலகத்தை வழி நடத்தமுடியும் . இருந்தாலும் உங்களின் இந்த நல்ல முயர்ச்சிக்கு நன்றி.


Hasan koothanallur
ஜூன் 24, 2025 12:05

அனைவரும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மற்ற மொழிகளை புறக்கணித்து விட்டு சமஸ்கிருதத்தை தூக்கி பிடிக்கும் ஆர் எஸ் எஸ் சொல்வது சிரிப்பாக இருக்கிறது இதில் தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அந்தஸ்து பெற்றிருக்கின்ற தமிழ் மொழிக்கு எந்த ஒன்றையும் கிள்ளி போடாத ஆர் எஸ் சொல்வது சிரிப்பாக இருக்கிறதுபாரத நாடு, இமயமலையின் இரு கரங்கள் மற்றும் கடல்களால் சூழப்பட்டுள்ளது.முக்கடலால் சூழப்பட்டிருக்கும் இந்திய துணை கண்டம் கடல் சார்ந்த வணிகம் கடல் சார்ந்த மீன்வளம் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு சைவ சித்தாந்தம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. மீன் அசைவ உணவு என்பதால் அதை நம்பி இருக்கின்ற 100 கோடி மக்களுடைய உணவு மற்றும் பொருளாதாரத்திற்கு சைவ சித்தாந்தம் எப்படி முன் நிற்க முடியும் இந்த மண்ணின் இன்றியமையாத தன்மை, உலகிற்கு தேவைப்படும் போதெல்லாம் தர்மத்தை வழங்க வேண்டும் என்ற புனிதமான கடமையுடன் இணைந்துள்ளது.அப்படி எந்த தர்மத்தை நிலைநாட்டி இருக்கிறது அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அரசாணை பெற்றிருக்கிறது


Palanisamy T
ஜூன் 24, 2025 16:26

1. Rss சின் மொழிக் கொள்கை பாஜகவின் மொழிக் கொள்கையோடு இணைந் துள்ளது. அது அவர்களின் தனிப் பட்ட உரிமை. 2. சைவ சித்தாந்த கொள்கையை நீங்கள் மிகத் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளீர்கள். சைவம் சொல்வது அனைத்தும் உண்மை. உண்மையென்ற கண்ணாடி யணிந்தால்தான் உண்மையை அறியமுடியும். சைவம் வேறு, தமிழ் வேறல்ல. அதை ஏற்பதும் ஏற்க முடியாததும் அவரவரின் தனிப்பட்ட உரிமை. கடல்சார்ந்த வணிகம் மீன்வளம் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு சைவம் மறுக்கின்றதென்று எப்படிச் சொல்லமுடியும்? இந்தச் செய்தியை இவ்வளவுக் காலம்கழித்து இப்போதுதான் புதிதாக கேள்விப் படுகின்றேன். மேலும் உயிரைக் கொள்வதும் புலால் உணவை உண்பதும் அவரவரின் தனிப் பட்டயுரிமை. அவரவர் செய்த பாவ புண்ணியங்கள் அவரவரை தான் சேரும். திருக்குறளும் இதைத்தான் வலியுறுத்துகின்றது. திருக்குறளும் சைவ சமய நூல். இதற்காக திருக்குறளை இந்தியப் பொருளாதாரத்திற்கு துணையாக யில்லை தடையாக உள்ளதென்று நீங்கள் சொல்வீர்களா?


venugopal s
ஜூன் 24, 2025 07:19

முதலில் உத்தரப்பிரதேசத்தையும், மத்தியப்பிரதேசத்தையும் ஒழுங்காக வழி நடத்தி முன்னேற்றும் வழியைப் பாருங்கள், பிறகு உலகத்தை வழி நடத்தலாம்!


Kasimani Baskaran
ஜூன் 24, 2025 04:05

திராவிடம் என்ற சமூகதீவிரவாதத்தை வேரறுக்க தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் பயிற்சி மையங்களை நிர்மாணித்து இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.


Oviya Vijay
ஜூன் 24, 2025 00:08

வேணாம் ஐயா... அவங்க அவங்க அவங்களோட வேலைய மட்டும் பார்க்கலாம்... தலைமை ஏத்து நடத்தணும்னு ஒவ்வொருத்தரும் நெனச்சா உலகத்துல அமைதியே இல்லாம போயிரும்...


vivek
ஜூன் 24, 2025 06:11

உனக்கு என்னப்பா.ஓவியரே...அமைதிக்கு நேர டாஸ்மாக் போய்விடுவாய்.....அவங்க உனக்கு சொல்லலை


ராஜா
ஜூன் 23, 2025 23:50

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை


அப்பாவி
ஜூன் 23, 2025 23:04

இவிங்க வழிநடத்துறாங்களாம்.


J.Isaac
ஜூன் 23, 2025 22:40

முதலில் இந்தியாவில் குப்பையை ஒழுக்கமாக போட வேண்டிய இடத்தில் போட , சாலை விதிகளின் படி வாகனம் ஓட்ட போதனை செய்து மக்களை கடைப்பிடிக்க வையுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை