உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிவி விவாத நிகழ்ச்சிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும்? சென்னை ஐகோர்ட் கேள்வி

டிவி விவாத நிகழ்ச்சிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும்? சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் தொலைக்காட்சியான 'ஸ்டார் விஜய்' நடத்தும், 'நீயா, நானா' என்ற நிகழ்ச்சியில், தெரு நாய்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பின், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், தெரு நாய்கள் கொல்லப்பட்டுள்ளன என, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் காந்த், பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'தெரு நாய்கள் பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. 'நிகழ்ச்சியில், தெரு நாய்களுக்கு எதிராகவும், நாய்களுக்கு உணவு அளிப்பவர்களுக்கு எதிராகவும், வன்முறையை துாண்டும் வகையிலும் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன' என்று, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், 'பொது மேடையில் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என்பதை, மனுதாரர் விளக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !