உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவான வழக்குகள் எத்தனை? டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் உத்தரவு

காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவான வழக்குகள் எத்தனை? டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் உத்தரவு

சென்னை: ‘தமிழகம் முழுதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட விபரங்களை, மூன்று வாரங்களில், டி.ஜி.பி., அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரை சேர்ந்த சங்கர்ராஜ் என்பவரை, சொத்து பிரச்னைக்காக, அவரது தந்தையும், சகோதரரும் சட்ட விரோதமாக சிறைபிடித்து வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி, அவரது மனைவி புவனேஸ்வரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, பி.கார்த்திகேயன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பல்வேறு மாநிலங்களில் காணாமல் போனவர்களை கண்டறிய, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை, அந்த மாநில காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதுபோன்ற செயலிகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆட்கொணர்வு வழக்குகளில், நீதிமன்றங்கள் அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்தாலும், தீவிரமாக விசாரணை நடத்தப்படுவதில்லை. சங்கர்ராஜை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கைகளை, திருக்கோவிலுார் டி.எஸ்.பி., அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தமிழகம் முழுதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறித்து, டி.ஜி.பி., மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !