ஸ்தோத்திர பாராயணம்; சிருங்கேரி பீடம் வேண்டுகோள்
சென்னை; 'மார்கண்டேய புராணத்தில் உள்ள, மிகுந்த மகிமை பொருந்திய ஸ்ரீதுர்கா ஸப்தஸதீயின் சுருக்கமான, 'ஸ்ரீதுர்கா ஸப்தஸ்லோகி' என்ற ஏழு சுலோகங்கள் அடங்கிய ஸ்தோத்திரத்தை, அக்., 2 வரை தினமும், 108 தடவைக்கு குறையாமல், அனைவரும் பாராயணம் செய்ய வேண்டும்' என, சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் தெரிவித்துள்ளார். இது குறித்து, மடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: மஹாபாரதத்தில் குருேஷத்திரப் போரின் துவக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனிடம், 'இந்தப் போரில் உனக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால், நீ அம்பாளின் அருளை அவசியம் பெற வேண்டும்' என கட்டளையிட்டதும், அர்ஜுனன், ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை குறித்து தவம் செய்து, ஜகதம்பாளின் அனுக்ரஹத்தை பெறுகிறான். ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசார்யாளும், ஜகன்மாதா குறித்து, அநேக ஸ்தோத்திரங்களை இயற்றியதோடு, தர்மத்தின் நிரந்தர பிரசாரத்திற்காக நிறுவிய, சிருங்கேரி பீடத்தின் முக்கியமான தேவதையாக, ஸ்ரீ சாரதாம்பாளை பிரதிஷ்டை செய்தருளினார். தற்போது நமது மாநிலம், நாடு, சமூகம் மற்றும் தர்மத்திற்கு ஏற்பட்டு வரும், பல்வேறு கஷ்டங்களுடன், ஆஸ்திக பக்த மஹாஜனங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள வேண்டியுள்ள, அனைத்து தொந்தரவுகளும் நீங்கி, எல்லா வகையிலும், மிக உயர்ந்த நிலையை, அனைவரும் அடைய வேண்டும் என்ற உறுதியுடன், இந்த ஆண்டு சரன் நவராத்திரியில், 'ஸ்ரீதுர்கா ஸப்தஸ்லோகி' என்ற, ஏழு சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை, தினமும் 108 தடவைக்கு குறையாமல் பாராயணம் செய்ய வேண்டும் என, ஜகத்குரு மஹா ஸ்வாமிகள் உத்தரவிட்டுள்ளார். சுலோகங்களை ஜகத்குரு மஹாஸ்வாமிகள் அருட்குரலிலும், பல்வேறு எழுத்து வடிவங்களிலும் கிடைக்க, www.sringeri.net இணையதளத்தில் பார்க்கவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.