உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைவேந்தர் நியமனத்திற்கு நான் முட்டுக்கட்டை அல்ல: கவர்னர் ரவி சுப்ரீம் கோர்ட்டில் பதில்

துணைவேந்தர் நியமனத்திற்கு நான் முட்டுக்கட்டை அல்ல: கவர்னர் ரவி சுப்ரீம் கோர்ட்டில் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'பல்கலைகளில் துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் கவர்னர் முட்டு கட்டை போடுகிறார் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல' என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை, ஒப்புதலுக்காக தமிழக அரசு, கவர்னருக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மசோதாக்களுக்கு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. அந்த உத்தரவைத் தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளில் மாநில அரசு இறங்கியது. இந்நிலையில், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, மாநில அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்தனர். இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கி ல், தமிழக கவர்னர் மற்றும் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., ஆகியவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கவர்னர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான குழுவை அமைப்பதில் குறைந்தபட்ச வரைமுறை கடைபிடிக்க வேண்டும் என யு.ஜி.சி.,யின் நெறிமுறைகள் தெளிவாக வகுத்துக் கூறப்பட்டுள்ளன. ஆனால், அதை தமிழக அரசு முழுமையாக பின்பற்றி இருக்கிறதா என ஆராய்வதற்காக தான், சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரித்து இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக அமைக்கப்படும் துணைவேந்தர் தேடுதல் குழு சட்டவிரோதமானது. துணைவேந்தர் தேடுதல் குழு அமைப்பதற்கான தகவலை கவர்னர் உரிய முறையில் மாநில அரசிற்கு தெரியப்படுத்தி விட்டார். அது தொடர்பான, கடித பரிமாற்றங்களே அதை தெளிவுபடுத்துகின்றன. யு.ஜி.சி., விதிமுறை அடிப்படையில், மாநில அரசு, துணைவேந்தர் தேடுதல் குழுவை நியமிக்காததால், பல்கலை வேந்தர் என்ற அடிப்படையில் யு.ஜி.சி., தலைவரை இணைத்து ஒரு தேர்தல் குழுவை கவர்னர் ஏற்படுத்தினார். இதில் எந்தத் தவறும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 14, 2025 12:33

துணை வேந்தர் பதவிகள் விற்பனை செய்வதை தடுக்க கவர்னர் முயற்சித்தால் மூட்டை மூட்டையாக பணம் வைத்து கொண்டு இருக்கும் நீதிபதிகள் எதிர்ப்பது நியாயம் தானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை