பல ரவுடிகளை பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்; அண்ணாமலை
சென்னை: பல ரவுடிகளை பார்த்து விட்டு வந்திருக்கிறேன். என்னிடம் இந்த மிரட்டல் எல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்திக்கிறார். இன்றைக்கு பல வீடியோக்களை நாம் பார்க்கிறோம். பைக் மீது திருமாவளவன் சென்ற கார் இடித்தது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதையெல்லாம் மறைத்துவிட்டு இன்று திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால், இவர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆட்சி நடக்கிறது.ஒரு சாதாரண மனிதர் ரோட்டில் செல்வதை போய் நீங்கள் தட்டுகிறீர்கள். கேட்டால் முறைத்து பார்த்தார், நாலு தட்டு தட்டியதாக சொல்கிறீர்கள். அதன் பிறகு மருத்துவமனையில் போய் நெஞ்சு வலி என்று படுத்திருந்தால் அதையும் கேவலப்படுத்துகிறீர்கள். அதனைக் கேள்வி கேட்டால் என்னை மிரட்டுகிறீர்கள். சாமானிய மனிதராக...!
அதைத் தாண்டி முதல்வரை சந்தித்து புகார் கொடுப்பேன் என்று சொல்கிறீர்கள். அதுவும் திருமாவளவன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எனது பெயரை இழுத்து, நான்தான் இதற்குப் பின்னால் இருந்தேன் என்கிறார். அந்த டூவீலர் காரர் யார் என்று எனக்குத் தெரியாது. நான் சாமானிய மனிதராக குரல் கொடுக்கிறேன்.நாகரிகமான அரசியல்
திருமாவளவன் இதனை எல்லாம் விட்டுவிட்டு, நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். இதுபோன்ற வெறுப்பு அரசியல், வன்முறை, மிரட்டுவது, ரோட்டில் செல்பவர்களை இடிப்பது, கேள்வி கேட்டால் அடிக்கப்போவது இது என்ன விதமான அரசியல்? இவர்கள் தமிழகத்தில் என்ன மாற்றத்தை கொடுக்கப் போகிறார்கள். இவர்களால் என்ன மாற்றம் நடக்கும்.யாருக்கு லாபம்?
வன்முறை அரசியலால் யாருக்கு என்ன லாபம். அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட போவது கிடையாது. உங்களுக்கு தெரியும் என்னை பொறுத்தவரை ஒரு அடி கொடுத்தால், இரண்டு அடி கொடுப்பவன் நான். மற்றவர்கள் மாதிரி வாங்கிட்டு போகிற ஆளு நான் இல்லை. எதற்கும் நான் தயார் தான். வர வேண்டும் என்றால் வாருங்கள். அதனால் இந்த உருட்டல், மிரட்டல் எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்.இதையெல்லாம் பார்த்து, காவல்துறை அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். பல ரவுடிகளை டீல் பண்ணியிருக்கிறேன். இந்த வேலை எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளக் கூடாது. அதே நேரத்தில் முதல்வரிடம் நான் சொல்வது நீங்கள் ஏன் எப்ஐஆர் போடவில்லை. மாநிலத்தின் முதல்வர் நீங்கள் ஏன் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. ரோட்டில் வன்முறை
மிகத் தெளிவாக ரோட்டில் வன்முறை நடந்திருக்கிறது. உங்க கூட்டணியை சேர்ந்த எம்பி காரில் இருக்கிறார். அவர் சம்பவம் நடந்த இடத்தில், காரில் இருந்து இறங்குகிறார். சாமானிய மனிதருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், காவல்துறையின் அமைச்சராக இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் அந்தப் பதவியில் உட்கார வேண்டுமா? ஒரு சாமானிய மனிதரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் முதல்வர் நாற்காலி எதற்கு? சாமானிய மனிதரின் பாதுகாப்பு முக்கியமில்லை. கூட்டணி கட்சியின் திருமாவளவன் தான் முக்கியம் என்று முதல்வர் ஸ்டாலினும் முடிவு எடுத்து விட்டார். முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து, காவல்துறையின் மானத்தையும், அரசின் மானத்தையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.வழக்கம்போல்...!
மேலும் அண்ணாமலை கூறியதாவது: கரூர் சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதல்வர் வழக்கம் போல் அரசின் மீது தவறு இல்லை. காவல் துறை மீது தவறு இல்லை என பேசியுள்ளார். வழக்கு சிபிஐயிடம் மாற்றப்பட்ட பின் முதல்வர் 606 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். சிபிஐக்கு ஒத்துழைப்பு வழங்கி உண்மை குற்றவாளிகளை கண்டறிய தமிழக அரசு உதவ வேண்டும். 41 பேர் உயிரிழந்த பின் ஒரு அரசு அதிகாரி மீது கூட ஏன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வாறு அண்ணாமலை கூறினார்.