பன்னீருடன் தொலைபேசியில் பேசினேன்: பா.ஜ., நாகேந்திரன்
சென்னை : ''கூட்டணியை மட்டும் பலமாக தி.மு.க., வைத்திருந்தால் போதாது; மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ., சார்பில், சென்னை அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதை, நாகேந்திரன் துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி: தே.ஜ., கூட்டணியில் சர்ச்சை எதுவும் இல்லை. எங்கள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க., முயற்சிக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும், கொள்கை அளவில் கூட்டணியில் இருப்பதில்லை; தேர்தலுக்காக சில கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன; அதற்குள் பெரிய மாற்றங்கள் வரும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன், நேற்று முன்தினம் கூட தொலைபேசியில் பேசினேன். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது; நல்ல முடிவு வரும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஆனால், அமித் ஷா அலுவலகத்தில் இருந்து, எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. கடந்த தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை. அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்துகின்றனர்; தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆசிரியர்கள், துாய்மை பணியாளர்கள் என, பல தரப்பினரும் போராட்டம் நடத்துகின்றனர். கூட்டணியை மட்டும் தி.மு.க., பலமாக வைத்திருந்தால் போதாது; மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். கடந்த 2001ல் மிகப்பெரிய கூட்டணியை கருணாநிதி உருவாக்கினார். அந்த தேர்தலில், தி.மு.க., ஆட்சிக்கு வரவில்லை. தொடர்ந்து, இரண்டாவது முறையாக தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில்லை. வரும் தேர்தலில் உறுதியாக ஆட்சி மாற்றம் வரும்; பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் இன்னும் ஒரு கவுன்சிலராகவோ, எம்.எல்.ஏ.,வாகவோ கூட ஆகவில்லை. எங்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் அக்கட்சி தலைவர் விஜய்க்கு தகுதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.