உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு ஒரு மாத சிறை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு ஒரு மாத சிறை

சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்ஷுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம், விநாயகா நகரைச் சேர்ந்தவர் லலிதாம்பாள். இவரது சகோதரர் விஸ்வநாதன், சென்னை ஷெனாய் நகரில் வசிக்கிறார். இவர்களுக்கு கோயம்பேடில் 17 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பொதுநலனுக்காக எனக்கூறி, 1983ல் தமிழக அரசு கையகப்படுத்தியது. பின், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, இந்த நிலம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வசம் வந்தது. ஆனால், எதுவும் கட்டாமல் நிலம் சும்மா கிடந்தது. இருபது ஆண்டுகளாக அரசு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் எங்கள் நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என, 2003ல் உயர் நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், 10.5 சென்ட் நிலத்தை மட்டும் அரசு திருப்பி கொடுத்தது. மீதமுள்ள 6.5 சென்ட் நிலம், நெசப்பாக்கம் சாலை விரிவாக்கத்துக்கு தேவை என கூறி, வீட்டுவசதி வாரியம் வசம் வைத்து கொண்டது. கையகப்படுத்திய நிலத்தை முழுதுமாக திருப்பி தரக் கோரி, 2023ல் இருவரும் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். நாற்பது ஆண்டுகள் கடந்தும் நீடித்த பிரச்னை குறித்து விசாரித்த உயர் நீதிமன்றம், 'மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து, இரண்டு மாதங்களில் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என, சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு, 2023 நவம்பரில் உத்தரவு பிறப்பித்தது.அந்த உத்தரவையும் அமல்படுத்தவில்லை என கூறி, லலிதாம்பாளும், விஸ்வநாதனும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். எதிர் தரப்பாக சி.எம்.டி.ஏ., குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது சி.எம்.டி.ஏ.,வின் உறுப்பினர் செயலராக இருந்தவர் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அன்ஷுல் மிஸ்ரா. வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. 'நான் கடந்த பிப்ரவரி 9ம் தேதி தான் இந்த பதவிக்கு வந்தேன். பிப்., 21ல் மனுதாரர்களை அழைத்து விசாரணை நடத்தினேன். 'பிப்., 28ம் தேதி அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தேன். நிர்வாக மாற்றங்கள் காரணமாக, முந்தைய உத்தரவை செயல்படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது; வேண்டுமென்று நீதிமன்ற உத்தரவை நிராகரிக்கவில்லை' என, மிஸ்ரா விளக்கம் அளித்தார்.அதை நீதிபதி ஏற்கவில்லை. 'குறித்த காலத்தில் மனுவை பரிசீலிக்காததால், மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அமல்படுத்தவில்லை. 'இது, நீதிமன்ற அவமதிப்பு தான். நியாயமும் வழங்காமல், தாமதத்திற்கு நொண்டி சாக்குடன் இங்கு வந்துள்ளார்' என நீதிபதி விமர்சித்தார்.'இவர் மட்டுமல்ல; அதிகாரிகள் கடமையை செய்யாததால், மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலையை பல வழக்குகளில் பார்க்கிறோம். நீதித்துறை தலையீட்டிற்கு பின்னும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்களுக்கு வசதியான காரணங்களை சொல்லி, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் முற்றிலுமாக புறக்கணிக்கின்றனர். 'அரசு அதிகாரிகள், தங்கள் மேலதிகாரிகளுக்கு மட்டுமல்ல; சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கும் பதிலளிக்க கடமைப்பட்டவர்கள். இந்த வழக்கில் ஆவணங்களை பார்க்கும்போது, வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. 'உறுப்பினர் செயலரின் செயல் தவறு மட்டுமல்ல; சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது' என நீதிபதி தெரிவித்தார். 'எனவே, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ராவுக்கு, ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 'இந்த தொகையை, அன்ஷுல் மிஸ்ராவின் ஊதியத்தில் அரசு பிடித்தம் செய்ய வேண்டும். மூன்று வாரங்களில் இழப்பீடு தொகையை வழங்காவிட்டால், மேலும் 10 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' என நீதிபதி தீர்ப்பளித்தார்.மேல்முறையீடு செய்ய ஏதுவாக, இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. குறித்த காலத்தில் மேல்முறையீடு செய்யாவிட்டால், அன்சுல் மிஸ்ரா தண்டனையை அனுபவிக்க தேவையான நடவடிக்கைகளை, உயர் நீதிமன்ற பதிவுத் துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அன்ஷுல் மிஸ்ரா தற்போது தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராக இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தாமரை மலர்கிறது
மே 24, 2025 23:52

நாற்பது வருடமாக லலிதாம்பாள் விஸ்வநாதன் சொத்தை ஆட்டைய போட்ட தமிழாடிற்கு அபராதம் விதிக்க வேண்டும். மேற்கொண்டு நேரத்தை கடத்திய அதிகாரிக்கு சிறை தண்டனை அப்பீல் பண்ணும்போது கிடைக்காது.


Oviya vijay
மே 24, 2025 20:52

தார்மீக அடிப்படையில் அவர் பணியில் இருந்து விலக வேண்டும். முறையாக கைது செய்து சிறையில் அடைத்து செய்த மற்றும் நிரூபணமான குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும். இதை அரசும் நீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும்


சிந்தனை
மே 24, 2025 20:24

கோர்ட்டை மதிக்காத அரசு ஊழியர்களுக்கும் நாட்டை மதிக்காத கோர்ட் ஊழியர்களுக்கும் தூக்கு தண்டனை கொடுப்பது நியாயம் என்று தோன்றுகிறது சிந்திக்க வேண்டுகிறேன்


Jeyaseelan
மே 24, 2025 15:56

Anshul Mishra IAS is a very Good Officer . He did lots of reforms in CMDA. Chennai city has transformed a lot because of him only.


Sampath
ஜூன் 08, 2025 06:31

ஓரே ஒரு முன்னேற்றம் அல்லது மாறுதலை சொல்லுங்கள். பாவிகளா


Ramaswamy SD
ஜூன் 10, 2025 00:26

பாதிக்கப்பட்ட லலிதாகுமாரி கணவர் நான்.எனது மைத்துனர் விஸ்வநாதன்.ஒரு ரைடு போட நாற்பத்து ஆண்டா?மக்களே சிந்தித்து உங்கள் தீர்ப்பை எழுதுங்கள்.


Sundar R
மே 24, 2025 11:41

EWS இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்தது. தமிழக அரசின் மேல்முறையீடு மனுவும் புஸ்வாணமாகியது. ஏழைகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும், தமிழகத்தில் தமிழக அரசு EWS. இட ஒதுக்கீட்டை இன்னும் அமல்படுத்தாமல் உள்ளது. தமிழக அரசின் இந்த தவற்றால் தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். தமிழக அரசின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்புதானே பாதிக்கப்பட்ட மக்களில் யாரேனும் CONTEMPT PETITION போடுவதற்கு முன்பாக தமிழக அரசு EWS இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.


Kasimani Baskaran
மே 24, 2025 11:03

கபில் சிபலுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கோடி கொடுத்து வாதாடி நீதியை வாங்க வாய்ப்பு இருக்கிறது.


GUNA SEKARAN
மே 24, 2025 10:56

திரு அன்ஷுல் மிஸ்ரா அவர்கள் மிகவும் நேர்மையான அதிகாரி. எங்களது குடியிருப்பு பிரச்சினைகளுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நிவர்த்தி கொடுத்தார். நல்ல மனிதர்.


kart
மே 24, 2025 09:54

so nice


SUBRAMANIAN P
மே 24, 2025 09:51

வெக்கமா இல்ல... அரசு, அதிகாரிகள், வக்கீல்கள் அனைவரும் தலைகுனிய வேண்டும்..


Ramaswamy SD
ஜூன் 10, 2025 00:31

வெட்கம்,மானம் சூடு ,சொரனை இல்லாத மனிதர்கள்


தமிழன்
மே 24, 2025 08:52

இன்னுமா இவரை கைது செய்யவில்லை..