உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமதாசுக்கு ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன்; எச்சரிக்கிறார் அன்புமணி

ராமதாசுக்கு ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன்; எச்சரிக்கிறார் அன்புமணி

சென்னை: “பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஏதாவது நடந்தால், சும்மா இருக்க மாட்டேன். தொலைத்து விடுவேன்,” என்று அன்புமணி எச்சரிக்கை விடுத்தார்.சென்னை பனையூரில் நடந்த கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே திட்டமிட்ட பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றார். அங்கு நலமாக இருக்கிறார். ஆனால் அருகில் இருக்கும் சிலர், 'ராமதாசுக்கு உடல்நிலை சரியில்லை, வந்து பாருங்கள்' என, அழைத்து அவரை பார்க்க வைத்திருக்கின்றனர். அவருக்கு 87 வயது. பரிசோதனைக்கு போயிருக்கிறார். காலில் ஆஞ்சியோகிராம் செய்திருக்கிறார்கள். நோய் தொற்று ஆகிவிடக் கூடாது. ஆனால், யார் யாரோ வந்து ராமதாசை பார்த்திருக்கின்றனர். அவர் என்ன கண்காட்சிப் பொருளா? இது அசிங்கமாக இருக்கிறது. அரசியல் தலைவர்களெல்லாம் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என்றே புரியவில்லை. ராமதாசை, அருகில் இருப்போர் எப்போதும் துாங்கக்கூட விடுவதில்லை. கழிப்பறையில் இருந்தால்கூட, போன் கொடுத்து பேச வைக்கின்றனர். ராமதாசை வைத்து நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ராமதாசுக்கு ஏதாவது நடந்தால், சும்மா இருக்க மாட்டேன்; தொலைத்து விடுவேன், இவ்வாறு அவர் பேசினார்.

திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி

இதனிடையே, கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு, சட்டத்தை வளைக்கும் திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை; கிட்னி திருட்டு வழக்கு தொடர்பாக தென்மண்டல போலீஸ் தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.மதுரை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை ஏற்க முடியாது என்றும்,அவர்களுக்கு பதிலாக தாங்கள் கூறும் அதிகாரிகளை சிறப்புப் புலனாய்வுக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்றும், உயர்நீதிமன்றம் அமைத்தக் குழுவே விசாரணையை நடத்தும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது சட்டத்தையும், நீதியையும் வளைத்து சிறுநீரகத் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு விழுந்த சம்மட்டி அடி ஆகும்.மதுரை உயர்நீதிமன்றக் கிளையால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த 5 அதிகாரிகளும் தமிழகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தான். ஒரு மாநில அரசு அதன் சொந்த அதிகாரிகள் நடத்தும் விசாரணையையே எதிர்க்கிறது என்றால், அவர்கள் நடத்தும் விசாரணையில் உண்மை வெளியாகிவிடும். அதனால் அவர்களுக்கு பதில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை வைத்து விசாரித்து குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிக்கிறது என்பது தான் பொருள். கிட்னி திருட்டில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது என்பதற்கு இது தான் சான்று ஆகும்.தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், நீதியை நிலை நிறுத்த வேண்டும் என்பதைக் கடந்து, நீதியை பலி கொடுத்தாவது தங்களுக்கு வேண்டியவர்களை பாதுகாக்க வேண்டும் என்று திமுக அரசு துடிக்கிறது. திமுக அரசு மக்கள் நலனைக் காக்கும் அரசு அல்ல.... கிட்னி திருட்டு, படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் அரசு என்பது உறுதியாகியிருக்கிறது. மக்கள்விரோத திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு தூக்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை