சென்னை: ''ஜெயலலிதா இருந்திருந்தால், செங்கோட்டையனுக்கு எம்.எல்.ஏ., பதவியே கிடைத்திருக்காது,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.சேலத்தில் அவர் அளித்த பேட்டி: கடந்த ஆறு மாதங்களாக செங்கோட்டையனின் நடவடிக்கைகள், கட்சிக்கு எதிராகவே உள்ளன. அத்திக்கடவு - அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியதற்காக, விவசாய அமைப்பினர் பாராட்டு விழா நடத்தினர். பங்கேற்கவில்லை
அது, கட்சி சார்பற்ற விழாவாக நடந்தது. அதில், நான் கலந்து கொண்டேன்; செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் பங்கேற்கவில்லை' என்றார். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாத இலவச சைக்கிள் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போதிருந்தே, 'பி டீம்' வேலையை செங்கோட்டையன் துவக்கி விட்டார்.இணைப்பு பற்றி பேச வேண்டும் என்றார். அவர்கள் பிரிந்து சென்றவர்கள் அல்ல; கட்சிக்கு துரோகம் செய்ததற்காக நீக்கப்பட்டவர்கள். நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என, பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு எடுக்கும் முடிவு இறுதியானது; அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். நீக்கப்பட்டவர்களோடு இணைந்து செயல்பட்டதால், செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை நான் மட்டும் எடுக்கவில்லை; மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி, சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தன்னை ஜெயலலிதா விசுவாசி என்கிறார். அப்படியெனில், அமைச்சர் பதவியிலிருந்து ஏன் செங்கோட்டையனை நீக்கினார்? நான் முதல்வரான பின்னரே, செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவியும், மாவட்டச் செயலர் பதவியும் கொடுத்தேன். ஜெயலலிதா இருந்திருந்தால், எம்.எல்.ஏ., பதவி கூட கொடுத்திருக்க மாட்டார்.கடந்த 2012 டிசம்பர் 19ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினகரன், இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். ஜெயலலிதா இறந்த பின், சசிகலாவால் துணை பொதுச்செயலரானார். கட்சியில் அவர் இணையாமலேயே, நேரடியாக பொறுப்பு கொடுத்தார் சசிகலா. இன்று வரை கட்சிக்கு விசுவாசமாக இருப்பதால் தான், தொண்டர்கள் எனக்கு பொறுப்பு கொடுத்துள்ளனர். இவர்களை போல் அவ்வப்போது பச்சோந்தி போல மாறுவது கிடையாது.பேசியதில்லை
சட்டசபையில் தி.மு.க.,வை எதிர்த்து, செங்கோட்டையன் பேசியதே இல்லை. தி.மு.க.,வின், 'பி டீம்' ஆக இருப்பது நிரூபணமானது. இதை யாரும் மறைக்க முடியாது. இதனால், அவர் நீக்கப்பட்டவுடன், கோபிசெட்டிபாளையம் தொகுதி நகர, ஒன்றிய செயலர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடுகின்றனர். அவர், 53 ஆண்டு காலம் கட்சியில் இருக்கிறார் என்றால், மக்களுக்கு, கட்சியினருக்கு உழைத்திருக்க வேண்டும். மாறாக இயக்கத்துக்கு துரோகம் செய்தால், இந்த நிலைமை தான் ஏற்படும். இரண்டு கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்துக்கு எதிராக பேசுபவர்களை, சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.சிற்றரசர்
செங்கோட்டையனுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறேன் என்று தினகரன் சொல்கிறார். நீக்கப்பட்டவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார் செங்கோட்டையன். இப்படி தலைமைக்கு விரோதமாக செயல்பட்டால், வேடிக்கை பார்க்க முடியாது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததோடு, தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும் என பன்னீர்செல்வம் பேட்டி கொடுக்கிறார்.இவரை எப்படி கட்சியில் இணைக்க முடியும்? இவர்கள் எல்லாம் அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்காக இணைக்கச் சொல்லவில்லை. தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்த மறைமுகமாக திட்டமிடுகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு பி டீம் ஆக செயல்படுவது தான் இவர்களின் திட்டம். கோபிசெட்டிபாளையம் பகுதியில் செங்கோட்டையன் சிற்றரசர் போல நடந்து கொண்டிருந்தார்.இன்று அப்பகுதி மக்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது; சுதந்திரம் கிடைத்துள்ளது. அதனால் தான் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
என்ன ஒரு வன்மத்தனம்!
''கோடநாடு பற்றி பேசியிருக்கிறார் செங்கோட்டையன். அ.தி.மு.க., ஆட்சியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல; இரண்டு, மூன்று கொலைகள் நடந்தன என்கிறார். என்ன ஒரு வன்மத்தனம்! கட்சிக்குள் இவரை வைத்திருந்தால் எப்படியிருக்கும்! மனசுக்குள் ஒன்றை வைத்து, வெளியில் நாடகத்தனமாக நடந்து கொள்கிறார் என்பது, இதிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து விட்டது,'' என்றார் பழனிசாமி.