காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கிட்னி பாதிப்பால் உயிர் பலிகள் தொடரும் நிலையில், ஐந்து ஆண்டுகளில் 50 பேர் பலியானதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். காரியாபட்டி அருகே உள்ள எஸ்.மறைக்குளம், சத்திரம் புளியங்குளம் கிராமங்களில் பலரும் கிட்னி பாதிப்பால் அவதிப்படுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்டவர்கள் கிட்னி பாதிப்பால் இறந்துள்ளனர். இவர்கள் அனைவருமே 40 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். இச்சம்பவம், இக்கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணமே குடிநீர் தான், என்கின்றனர் கிராம மக்கள்.
இது தொடர்பாக ரூபன், 40, கூறுகையில்,''கடந்த மூன்று மாதத்திற்கு முன் முகம்,கை, கால் வீங்கி, உடல் சோர்வு ஏற்பட்டது. மதுரை கிட்னி சென்டரில் சோதித்த போது, இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டது தெரிந்தது. தற்போது மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். கிராமத்தில் கிட்னி பாதிப்பால் பலர் இறந்த நிலையில், நானும் நாட்களை எண்ணி வருகிறேன்,'' என்றார்.
திரிமேனி, 50, கூறுகையில்,'' கிட்னி பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிடுகிறேன். உடலில் உப்புச்சத்து கூடிவிட்டதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இங்குள்ள குடிநீர், சுண்ணாம்பு கலந்ததாக இருப்பதால், பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற பீதி உள்ளது. இங்குள்ள குடிநீரை சோதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அழகர்சாமி, 50, கூறுகையில்,'' கிட்னி பாதிப்பால் குறைந்த வயதுடையோர் திடீரென இறக்கின்றனர். ஒரே குடும்பத்தில் இரண்டு, மூன்று பேர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் தெரியவில்லை. குடிநீரால் பாதிக்கப்பட்டிருக்கலாம், என்கின்றனர். ஒரு சில ஆண்டுகளிலேயே 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். தற்போது இங்கு 30க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
விருதுநகர் சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''கிட்னி பாதிப்புக்கு குடி நீர் கூட முக்கிய காரணமாக இருக்கலாம் . குடிநீரில் கால்சியம் அதிகமாக இருக்கும் போது, கிட்னி பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தொடர்பாக ஆய்வு செய்து, குடிநீரில் பிரச்னை என்றால் சுத்திகரிப்பு பிளான்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.