உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாசு ஏற்பட்டால் அதே இடத்தில் பரிசோதனை; நவீன மீட்டர்கள் வாங்குகிறது மா.க., வாரியம்

மாசு ஏற்பட்டால் அதே இடத்தில் பரிசோதனை; நவீன மீட்டர்கள் வாங்குகிறது மா.க., வாரியம்

சென்னை : எண்ணெய் வெளியேற்றம், வாயு கசிவு, நீர், காற்று மாசு போன்ற புகார்களில், மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பாமல், இனி சம்பந்தப்பட்ட இடத்திலேயே பரிசோதனை செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நீர் நிலைகள், காற்று மாசுபடுவது குறித்த புகார்கள் வந்தால, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், நேரில் சென்று ஆய்வு செய்வர். பின்னர் அந்த இடத்தில், பல்வேறு மாதிரிகளை சேகரித்து, அவற்றை ஆய்வகங்களுக்கு எடுத்து செல்வர். ஆய்வகத்தில் பரிசோதனை செய்து, அங்கு எந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிடுவர். இதற்கு காலதாமதம் ஏற்படும்.மாசு அளவை உறுதி செய்வதை, உடனடியாக முடித்தால், பாதிப்புகளை விரைந்து கட்டுப்படுத்தலாம். எனவே, மாசு தொடர்பான, ஆய்வுப் பணிகளை விரைவாக முடிக்க, மாசு கட்டுப்பாடு வாரியம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பேரிடர் காலங்களில், மாசு அளவை கண்டுபிடிப்பதில், சில மணி நேர கால தாமதம் கூட, பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இதனால், காற்று மற்றும் நீர் மாசு தொடர்பான புகார்களில், சம்பந்தப்பட்ட இடத்திலேயே, உடனடியாக பரிசோதனையை முடிக்க, மாசு கட்டுப்பாடு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன. இது குறித்து, மாசு கட்டுப்பாடு வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புயல், மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக, எண்ணெய் கசிவு, வாயு கசிவு, நீர் மாசுபடுதல் போன்ற புகார்கள், சமீப காலமாக எழுகின்றன. இந்த புகார்கள் மட்டுமல்லாது, வழக்குகள் காரணமாகவும், மாசு பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழுகிறது. இது போன்ற சமயங்களில், மாதிரிகளை சேகரித்து ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்வதில், காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, கள நிலையிலேயே, பரிசோதனையை முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, எளிதில் எடுத்து செல்லக்கூடிய மீட்டர்களை, முதல் கட்டமாக, 18 எண்ணிக்கைகள் வாங்க முடிவு செய்து இருக்கிறோம். இதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இக்கருவியை பயன்படுத்தி, நீர், காற்று மாசு சோதனைகளை செய்ய முடியும். அடுத்த சில மாதங்களில், இக்கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை