உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் சட்ட கல்லுாரிகளை மூடுவதே நல்லது

ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் சட்ட கல்லுாரிகளை மூடுவதே நல்லது

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ள உத்தரவிடக் கோரி, 2018ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வசந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட கல்வி இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்ட கல்லுாரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில், 19 பணியிடங்கள் காலியாக உள்ளன.மொத்தமுள்ள 206 உதவி பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளன' என கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அரசு சட்ட கல்லுாரிகளில், அதிக காலிப் பணியிடங்கள் இருப்பது விசித்திரமானது மட்டுமல்ல, துரதிருஷ்டவசமானது. அரசு சட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், மாணவர்களுக்கு முறையான சட்ட கல்வியை வழங்க முடியும் என எதிர்பார்க்க முடியாது.இது உன்னதமான சட்ட தொழிலை படித்து, வழக்கறிஞராக விரும்பும் எதிர்கால தலைமுறையை அழித்து விடும். முறையான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியவில்லை என்றால், சட்ட கல்லுாரிகளை மூடி விடுவது நல்லது. தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், கவுரவ விரிவுரையாளர்கள் வாயிலாக பாடம் நடத்துவது என்பது, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடும்; அதை ஏற்க முடியாது.அரசு சட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை, குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புவதற்கான செயல் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க, தமிழக அரசின் சட்ட துறை செயலர், வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundaran manogaran
அக் 03, 2024 11:41

பதவிகளுக்கான விலையை நீதிமன்றம் நிர்ணயித்து உத்தரவு போட்டால் உடனடியாக நியமனம் செய்து விடலாம்.வசூல் சிக்கல் காரணமாகத்தான் தாமதமாகுது.... மத்தபடி தமிழ் நாடு தான் எல்லாத்திலேயும் நம்பர் ஒன்... ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை