உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 18 இடங்களில் வருமான வரி சோதனை; போலி வருமான வரி கணக்குகள் கண்டுபிடிப்பு

18 இடங்களில் வருமான வரி சோதனை; போலி வருமான வரி கணக்குகள் கண்டுபிடிப்பு

கோவை : தமிழகத்தில் பல்வேறு இடங்களில், போலியாக வருமான வரி கணக்கு காட்டி, ஏற்கனவே செலுத்திய வரித்தொகையை திரும்ப பெற்றதை, வருமான வரித்துறையினர் நேற்று நடத்திய சோதனையில் கண்டு பிடித்துள்ளனர்.வருமான வரி செலுத்துவோரில் சிலர், கணக்கு தாக்கல் செய்யும் போது, போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து, ஏற்கனவே செலுத்திய வரித்தொகையை திரும்ப பெறுவது வழக்கம்.இப்படி வரிப்பிடித்தம் செய்த தொகையை, மோசடியாக திரும்ப கோரியவர்களுக்கு எதிராக, தமிழகத்தில் கோவை, திருச்சி, சேலம், மதுரை, சென்னை, வேலுார், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட, 18 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.இதில், வருமான வரித்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், முகவர்கள் இணைந்து ஆயிரக்கணக்கான வருமான வரி செலுத்துபவர்களின் வரித்தொகை திரும்ப பெறும் கோரிக்கைகளை தயார் செய்து, மாநிலம் முழுதும் செயல்படுத்தியிருப்பது தெரியவந்தது. அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை, மருத்துவ செலவினங்கள், கல்வி கட்டணம், வீட்டு வாடகை சலுகை மற்றும் பல தலைப்புகளின் கீழ் போலியாக கழிவுகள் கோரப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் வாயிலாக, கோடிக்கணக்கான ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. இது, அரசுக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழகம் மட்டுமின்றி டில்லி, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர், அசாம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வரி செலுத்துனர்கள் பலரிடமும், முகவர்கள் தொடர்பு கொண்டு இத்தகைய மோசடியை பரப்பியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.தமிழகத்தில் பல இடங்களில் செயல்படும் முகவர்கள், இதற்கென தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கி, அக்கணக்குகள் வாயிலாக, ஆயிரக்கணக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்துள்ளதும், கோடிக்கணக்கில் திருப்பி செலுத்துதல்களை பெற்றுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.இச்சோதனைகளில், பெருந்தொகைக்கான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்புடைய இடங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அரசு வருமானத்தை மோசடியாக சூறையாடும் சதி நிகழ்ந்துள்ளதால், வருமான வரி செலுத்துவோர், நெறியற்ற நபர்களின் சலுகைகளுக்கு உடன்படாமல், விலகி இருக்க வேண்டுமென, வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தற்போது அல்லது கடந்த ஆண்டுகளில், போலியான கழிவுகள் வாயிலாக, தவறான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தவர்கள், தாங்களாக முன்வந்து, தொகுப்புச் சீர்திருத்த அறிக்கைகள் அல்லது திருத்திய அறிக்கைகள், தாக்கல் செய்ய வேண்டும். வரி செலுத்துனர்களிடம் இருந்து, நேர்மையாக வரும் ஒத்துழைப்பு, எதிர்காலத்தில் தண்டனை அல்லது குற்றவியல் நடவடிக்கைகளைத் தவிர்க்க உதவும் என, வருமானத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி