கோவை: ''உலகை அன்பால் அரவணைத்து வழி நடத்திச் செல்கிறது நம் பாரதம்,'' என, கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.கோவை மாவட்டம் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நுாற்றாண்டு விழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளின் திருமடத்தில் நேற்று நடந்தது. அதுவே தர்மம்
இதில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் தர்மத்தையும், கலாசாரத்தையும் காக்கவும், மக்களின் மனங்களில் உயர்ந்த இடத்தில் இருக்கச் செய்யவும், மிகப்பெரிய பணிகளை செய்து வருகின்றனர். இது மிகவும் தேவையானது. இவ்விழாவுக்கு அழைத்ததும், என் கடமை என, அசாமில் இருந்து வந்துள்ளேன்.அனைவரும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆதீனத்தின் நுாற்றாண்டு விழாவோடு, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் நுாற்றாண்டு நிறைவையும் சேர்த்து கொண்டாடுவதற்கு நன்றி.பாரத நாடு இமயமலையின் இரு கரங்கள் மற்றும் கடல்களால் சூழப்பட்டுஉள்ளது. இந்த மண்ணின் இன்றியமையாத தன்மை, உலகிற்கு தேவைப்படும் போதெல்லாம், தர்மத்தை வழங்க வேண்டும் என்ற புனிதமான கடமையுடன் இணைந்துள்ளது.உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. எது நிலைத்து இருக்கிறதோ அதுவே தர்மம்; வேறு ஒன்றுமில்லை. தர்மம் என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, மதம் என்று கூறக்கூடாது. அயல் நாட்டு மொழிகளில் தர்மம் என்ற சொல்லுக்கு இணையான ஒரு வார்த்தை இல்லை. நம் பாரத நாட்டில் உள்ள அனைத்து மொழிகளிலும் தர்மம் என்ற வார்த்தை உள்ளது. அனைத்தும் ஒன்றே என்பதே எப்போதும் நிலைத்து இருக்கும் உண்மை. அதனாலேயே, உலகில் இருக்கும் அனைவருடனும் நாம் நட்புடன் இருக்கிறோம். அவர்களுக்கு இந்த உண்மையை கற்றும் தருகிறோம்.பாரதம் எப்போதும் உலகை ஆக்கிரமிக்கவில்லை; அன்புடன் அரவணைத்து வழி நடத்துகிறது. உலகத்தின் மீது போதனைகளை கொடுக்காமல், எதையும் திணிக்காமல், நாமே உதாரணமாக வாழ்ந்து தர்மத்தை வழங்குகிறோம். விழிப்புணர்வு
அதுவே நம் பாரதம்; அதுவே ஹிந்து கலாசாரம். இதற்கு எந்த காலவரையறையும் இல்லை. இது, பல யுகங்களாக நடந்து வருகிறது.சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தற்சார்பு பொருளாதாரம், குடும்பங்களை பேணுதல் உள்ளிட்ட சங்கம் மேற்கொள்ளும் ஐந்து முக்கிய பணிகளை, பேரூர் ஆதீனமும் மேற்கொள்கிறது. இதுபோன்று பல ஆன்மிக மையங்களும், அவர்களின் வழிகளில் பணிகளை செய்து வருகின்றன. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.