உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் உற்பத்தி நிலையங்களுக்கு இயற்கை எரிவாயு தர இந்தியன் ஆயில் விருப்பம்

மின் உற்பத்தி நிலையங்களுக்கு இயற்கை எரிவாயு தர இந்தியன் ஆயில் விருப்பம்

சென்னை:திரவநிலை இயற்கை எரிவாயு வினியோகம் தொடர்பாக, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் மின் வாரிய அதிகாரிகள் பேச்சு நடத்தினர். சென்னை பேசின்பிரிட்ஜ், திருவாரூர் திருமக்கோட்டை, நாகை குத்தாலம், ராமநாதபுரம் மாவட்டம் வழுதுாரில், எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன. சென்னை பேசின்பிரிட்ஜ் நிலையத்தில், நாப்தா அல்லது அதிவேக டீசல் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், உற்பத்தி செலவு அதிகம் என்பதால், அவசர காலத்திற்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற எரிவாயு மின் நிலையங்களில், இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில், எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளதால், திருக்கோட்டையில் உற்பத்தி முடங்கியுள்ள நிலையில், மற்ற இரு மின் நிலையங்களிலும் பாதி அளவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் எண்ணுார் துறைமுக வளாகத்தில், எல்.என்.ஜி., எனப்படும், திரவநிலை இயற்கை எரிவாயு முனையத்தை, இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்து உள்ளது. இந்த எரிவாயுவை வினியோகிக்க, எண்ணுார் - துாத்துக்குடி வரை, 'பைப் லைன்' அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில், வழுதுார் நிலையத்திற்கு திரவநிலை இயற்கை எரிவாயு வழங்குவதற்கான திட்ட அறிக்கையை, இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுதொடர்பாக, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், மின் உற்பத்தி இயக்குநர் கோவிந்தராவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சந்தை பிரிவு பொது மேலாளர் சுமன் மிஸ்ரா நேற்று பேச்சு நடத்தினர். இதைத்தொடர்ந்து, பேசின்பிரிட்ஜ் மின் நிலையத்திற்கும் எரிவாயு வினியோகம் செய்வது தொடர்பாக அறிக்கை வழங்குமாறு, இந்தியன் ஆயில் அதிகாரி களிடம் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை