உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது அநீதி; உள்ளாட்சியில் ஓட்டுரிமை இல்லாத மலைவாழ் மக்கள்!

ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது அநீதி; உள்ளாட்சியில் ஓட்டுரிமை இல்லாத மலைவாழ் மக்கள்!

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை உள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை. 2006 வன உரிமைச்சட்டப்படி, உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மூன்றாண்டுக்கு முன் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, திருமூர்த்திமலை, குருமலை, மேல்குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை ஆகிய மலைக்கிராமங்கள், தளி பேரூராட்சியில் இணைக்கப்பட்டு, இரு வார்டுகள் அமைக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், மற்ற மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை இல்லை. இது குறித்து, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலை தாலுகாவில், 15 மலைக்கிராமங்களுக்கு சட்டசபை, லோக்சபா தேர்தலில் ஓட்டுரிமை உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். 2006 வன உரிமைச்சட்டப்படி, வன கிராமங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, வீட்டுமனை, விவசாய நில பட்டா வழங்கப்பட்டுள்ளது.மாவடப்பு, காட்டுப்பட்டி, குளிப்பட்டி, கருமுட்டி, ஈசல்திட்டு, ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்துார், தளிஞ்சி, தளிஞ்சி வயல் ஆகிய, 10 வனக்கிராம மக்களுக்கு உள்ளாட்சியில் ஓட்டுரிமை இல்லை. மலைப்பகுதியிலுள்ள கிராமங்களை இரண்டு ஊராட்சிகளாக பிரித்து, மலைவாழ் மக்களுக்கு ஓட்டுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை, தனி ஊராட்சியாக பிரிக்கும் வரை, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களுடன் இருக்கும் ஊராட்சிகளுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் சொல்வது என்ன?

மலைவாழ் மக்களுக்கு சட்டசபை, லோக்சபா தேர்தலில் ஓட்டுரிமை இருந்தாலும், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால், அடிப்படை வசதிகளான ரோடு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்வதில், வனத்துறை கட்டுப்பாடுகள் மற்றும் ஒவ்வொரு முறை செல்லும் போதும், வனத்துறை அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.இதனால்,உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்காமல், ஓட்டுரிமை வழங்காமல் அரசும், அதிகாரிகளும் இழுத்தடித்து வருகின்றனர்.திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டபோது, ''அடர்ந்த வனப்பகுதி, தொலைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு ஓட்டுரிமை விடுபட்டுள்ளது. தற்போது, 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளையும் இணைத்து, தனியாக இரு ஊராட்சிகளாக அமைக்க வேண்டும் என, மனு அளித்துள்ளனர். இது குறித்து நேரில் ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

lana
ஜன 20, 2025 00:04

ஏம்பா பாவி உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் மாநில அரசு நடத்துவது. அதனால் தான் எதுவும் நடக்கவில்லை. mla mp தேர்தல் மத்திய தேர்தல் ஆணையம் நடத்துவது. எதுவுமே தெரியாமல் அடித்து விட வேண்டியது. அதுக்கும் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் திருட்டு வெங்காய மாடல் எதுக்கு தான் இங்கு இருக்கிறது.


Laddoo
ஜன 19, 2025 15:11

ராம்சாமி சொரியார் அடிவருடிகள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்?


Barakat Ali
ஜன 19, 2025 12:02

என்ன ???? சமூக நீதி க்காகவே செயல்படும் ஒரே கட்சியான திமுக ஆளும் தமிழகத்தில் இந்த அவலமா ????


அப்பாவி
ஜன 19, 2025 10:25

பத்து வருஷ காலம் பழங்குடிகளை தூக்கி வுட்ட சௌக்கிதார் என்ன பண்றாரு?


sundarsvpr
ஜன 19, 2025 07:53

அலுவலக பணி பரவலாக இருக்கவேண்டும். மேல்மட்டத்தில் அதிகார வரம்பை வைத்துக்கொண்டு கீழ்மட்ட பணியாளர்களை துரிதமாய் துல்லியமாய் பணிகளை செய்திட நிர்பந்திப்பது எந்த பயனும் இல்லை. காரணம் ஊழியர் சங்கங்கள் இதில் கவனம் செலுத்தவேண்டும். அரசை நிர்பந்திக்கவேண்டும். ஒரு நகராட்சி புறக்கணிப்படும் என்றால் மற்ற நகராட்சிகள் தங்கள் கண்டன தீர்மானம் அனுப்பவேண்டும்.


முக்கிய வீடியோ