கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வட்டியில்லா கடன்
சென்னை:கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தற்போது 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதை வட்டியில்லாமல் வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. இத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன், நகை க்கடன் என, பல்வேறு பிரிவுகளின் கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன. கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தி, சுய தொழில் செய்து, வாழ்வில் முன்னேற கடன் வழங்கப்படுகிறது.இந்த பிரிவில் 5 சதவீதம் என, குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடந்த 2024 - 25ல், 5,923 பெண்களுக்கு, 26 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டியில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை வளர்ப்பு கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த பிரிவுகளில் உரிய காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்துவோருக்கு, வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, பெண்களின் ஓட்டுகளை கவர, கூட்டுறவு வங்கிகளில், கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, வட்டியில்லாமல் கடன் வழங்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.