திருப்பரங்குன்றம் விவகாரம் நீதி விசாரணை தேவை; தவ்ஹீத் ஜமாத் செயலாளர் பேட்டி
மதுரை : ''திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அன்சாரி கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு கையாண்ட விதம் சரியில்லை. திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என எச்.ராஜா பேசியதை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. தர்காவில் ஆடு, கோழி பலியிட சட்டப்படி என்ன தடை இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு நிர்வாகம், கலெக்டர், வருவாய் அதிகாரிகள் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்கள்.தமிழகத்தில் சங் பரிவார் அமைப்பினர் கலவரத்தை துாண்ட முயற்சிக்கிறார்கள்.தொடர்ந்து வழக்கு போட்டுக்கொண்டே இருக்கின்றனர். மத மோதலுக்கு திட்டமிடுகிறார்கள். அரசு உடனே தலையிட்டு தடுக்க வேண்டும். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இவ்விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடக்கூடாது, மக்களை முட்டாளாக்க கூடாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.