உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டன் பிரச்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தது பிரதமர் மோடிதான் தமிழக பா.ஜ., செயலர் ராம சீனிவாசன் பேட்டி

டங்ஸ்டன் பிரச்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தது பிரதமர் மோடிதான் தமிழக பா.ஜ., செயலர் ராம சீனிவாசன் பேட்டி

அவனியாபுரம்:''டங்ஸ்டன் பிரச்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தது பிரதமர் மோடிதான்,'' என, மதுரை விமான நிலையத்தில், தமிழக பா.ஜ., செயலர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.டங்ஸ்டன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ராம சீனிவாசனுடன், மேலுார் விவசாயிகள் ஏழு பேர், சில நாட்களுக்கு முன் டில்லி சென்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். அவர்கள் நேற்று மதுரை திரும்பினர்.

ஏலம் ரத்து

விமான நிலையத்தில் ராம சீனிவாசன் கூறியதாவது:டங்ஸ்டன் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சர் வாயிலாக, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கொடுத்த அனுமதி ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் கனிம வளங்கள் உள்ளன என்று, நாடு முழுதும் ஜியாலஜிக்கல் நிறுவனம் ஆய்வு செய்கிறது. டங்ஸ்டன் அரிய வகை தாதுப்பொருள். அதை, தற்போது வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இருப்பதால்தான் தமிழக அரசிடம் பேசி, ஏலம்விட தயாரானபோது மாநில அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுடன் கலந்தாலோசித்த பிறகே, பாதிப்புகள் தெரிய வந்தது. மக்கள் தெரிவித்த கருத்துகளை மத்திய அமைச்சர் ஏற்று, விவசாயிகளுக்கு ஆதரவாக பிரதமரிடம் பேசி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்துள்ளார்.திட்டத்தை ரத்து செய்ய ஒத்துழைப்பு கொடுத்த மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு நன்றி.தமிழக அரசின் நடவடிக்கையால் தான், மத்திய அரசு பணிந்து இத்திட்டத்தை ரத்து செய்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திட்டத்தை ரத்து செய்ய அனைத்து கட்சியினரும் போராடினர். இந்த விஷயத்தை அரசியலாக்க இப்போது விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மோடிக்கு நன்றி

விவசாயிகள் மகாமுனி, ஆனந்த் கூறுகையில், 'மேலுார் பகுதி மக்கள், இரு மாதங்களாக கவலையுடன் இருந்தனர். மிகப்பெரிய சவால் இருந்தது. மதுரைக்கு நடைபயணம் மேற்கொண்டோம். போராட்டத்தின் விளைவாக மிகப்பெரிய வெற்றிப்பரிசு கிடைத்திருக்கிறது.'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் திட்டம் வராது என உறுதி அளித்திருந்தார். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சருக்கும் பா.ஜ., நிர்வாகிகளுக்கும் கிராமத்தின் சார்பில் நன்றி' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !