| ADDED : செப் 14, 2025 06:13 AM
பணஜி: ''கோவாவில் 13 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது சுரங்கப் பணிகள், மீண்டும் விரைவில் துவங்கும்,'' என அம் மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நம் பிக்கை தெரிவித்துள்ளார். கோவாவில் இயங்கி வந்த இரும்புத் தாது சுரங்கப் பணிகளை தொடருவதற்கு, 2012 அக்டோபரில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டதால், கடந்த 13 ஆண்டுகளாக சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், குத்தகைக்கு எடுத்த சில நிறுவனங்களுக்கு புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி தரப் பட்டுள்ளது. இதையடுத்து, நிறுத்தப்பட்ட சுரங்கப் பணிகள் மீண்டும் துவங்க உள்ளதாக பா.ஜ.,வைச் சேர்ந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். இந்திய கடல்சார் வார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இது குறித்து கூறியதாவது: இரும்புத் தாது சுரங்கப் பணிகள் மீண்டும் துவங்குவதன் மூலம், கோவா மாநிலம் புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைக்க உள்ளது. சுரங்கப் பணிகள் நடப்பு நிதியாண்டுக்குள் துவங்கப்பட்டு விடும். சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், 2026 ஜனவரிக்குள் ஏற்றுமதி செய்யப்படும். இதன் மூலம் அதிகளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுரங்கப் பணிகள் மீண்டும் துவங்கவுள்ளதால், மர்மகோவா துறைமுகமும் புத்தாக்கம் பெறும். அங்கு சரக்குகளை கையாளும் பணிகள் அதிகரிக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுரங்கப் பணிகள் நடப்பதை உறுதி செய்துள்ளோம். இதற்காக நிகழ்நேர கண்காணிப்புடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் கடை பிடிக்கப்படும். நவீன முறையில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.