கரூர் சம்பவத்துக்கு ஆறுதல் சொல்ல போகாதவர் மனிதாபிமானம் உள்ளவரா? விஜய் குறித்து துரைமுருகன் கேள்வி
வேலுார்: ''கரூரில் 41 பேர் இறப்பிற்கு, நேரில் ஆறுதல் சொல்லாதவர் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா?'' என அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலுார் மாவட்டம் காட்பாடியில் அவர் அளித்த பேட்டி: 'கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும், நான் அஞ்ச மாட்டேன்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அவர், ஏதோ ஒரு தைரியத்தில் அப்படி கூறியிருக்கிறார். ஆனால், சட்டம் என்ன சொல்கிறதோ, அதை தமிழக அரசு செய்யும். உச்சபட்ச அதிகார மயக்கத்தில், மனிதாபிமானம், மாண்பு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுவதாக முதல்வரை தாக்கி, த.வெ.க., தலைவர் விஜய் பேசியிருக்கிறார். அது குறித்து இங்கே நீங்கள் கேட்கிறீர்கள். நல்ல மனிதர் கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்புக்கு காரணமாக இருந்துவிட்டு, பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்கு சென்று நேரில் ஆறுதல் சொல்லாதவர் மனிதாபிமானம் உள்ளவரா? ஆனால், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா? தி.மு.க.,வின் நாட்கள் எண்ணப்படுவதாக பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன் கூறியுள்ளார். அவர் பாவம், நல்ல மனிதர்; யாரோ சொல்லிக் கொடுப்பதை அப்படியே ஒப்புவிக்கிறார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் செங்கோட்டையனை, கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். அது, அவர்கள் கட்சி விவகாரம். கட்சி ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் ஏன் குரல் எழுப்பினார் என்பது குறித்து, அவரோ, பழனிசாமியோ தான் பதில் சொல்ல வேண்டும். உண்மை வெளிவந்தது டில்லிக்கு சென்ற செங்கோட்டையன், நான் யாரையும் சந்திக்கவில்லை என கூறினார். பின், கட்சியை விட்டு நீக்கியவுடன், பா.ஜ., தான் தன்னை அழைத்து ஒன்றிணைக்கும் பணியை மேற்கொள்ளச் சொன்னதாக தெரிவித்திருக்கிறார். மொத்தத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை வெளிவந்து விட்டது. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.