உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் மணி மண்டபம் விசிட் * முத்தரையர் ஓட்டுகளை கவர முயற்சியா?

முதல்வர் ஸ்டாலின் மணி மண்டபம் விசிட் * முத்தரையர் ஓட்டுகளை கவர முயற்சியா?

திருச்சி:தி.மு.க., மீது முத்தரையர்களுக்கு உள்ள அதிருப்தியை சரி செய்யவும், அவர்களின் ஓட்டுக்களை வரும் சட்டசபைத் தேர்தலில் கவரவும், திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடந்த பாரத சாரணர் வைரவிழாவின் நிறைவு விழாவில் பங்கேற்க கடந்த, 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திருச்சி வந்தார். முதல்வரின் பயணத்திட்டத்தில் இல்லாத நிலையில், திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள, பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணி மண்டபங்களுக்கு சென்று, முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பயணத் திட்டத்தில் இல்லாமல், ஏன் முதல்வர் மணி மண்டபங்களுக்கு திடீரென சென்றார் என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில், தி.மு.க., மீது அதிருப்தியில் இருக்கும் முத்தரையர் ஓட்டுக்களை கவரவே, முதல்வர் ஸ்டாலின் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க.,வினர் கூறியதாவது: கடந்த ஆண்டு பிப்., மாதம் திருச்சியில் உள்ள மூன்று மணிமண்டபங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது முத்தரையர் சமுதாயத்தினர், ஏன் முதல்வர் நேரில் வந்து திறக்கமாட்டாரா... மற்ற மணிமண்டபங்களை நேரில் சென்று திறக்கிறாரே என்று கேள்வி எழுப்பி, போராட்டமும் நடத்தினர்.தவிர, தி.மு.க., ஆட்சியில் முத்தரையரில், மெய்யநாதன் தவிர, யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. யாரும் மாவட்டச் செயலர்களாகவும் இல்லை. திருச்சி மாவட்டத்தில், 9 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற, இங்கு பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமுதாய மக்களும் முக்கிய காரணம். இதனால், உரிய முக்கியத்துவம் தராத தி.மு.க., மீது முத்தரையர் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த ஆண்டு தேர்தலும் வருகிறது.அந்த அதிருப்தியை சரி செய்யத்தான், முதல்வர் ஸ்டாலின் திடீரென மணிமண்டங்களுக்கு சென்று, பெரும்பிடுகு முத்தரையர் சிலை உள்ளிட்ட அனைத்து தலைவர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை