சென்னை:பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாவது பாகத்தில், தமிழக அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், பதிவாகும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் வீடு என்ற கொள்கை அடிப்படையில், பி.எம்.ஏ.ஓய்., எனப்படும், பிரதமரின் வீட்டுவசதி திட்டம், 2015ல் துவங்கப்பட்டது. நகர்ப்புற பகுதிகளில் நிலம் வைத்துள்ள ஏழை மக்கள் வீடு கட்ட, மானியம் வழங்குவது, ஆட்சேபகரமாக இடங்களில் வசிப்போருக்கு பாதுகாப்பான வீடு வழங்குவது, வங்கி கடனில் வீடு வாங்குவோருக்கு வட்டி மானியம் வழங்குவது என, மூன்று பிரிவுகளில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் பிரிவில், 2015 முதல் 2024 வரை, 5282 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது; 6.80 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, 6.61 லட்சம் வீடுகளுக்கான பணிகள் துவங்கின; 5.97 லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் பாகம், பி.எம்.ஏ.ஓய்., 2.0 கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில், நாடு முழுதும், ஒரு கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட மூன்று பிரிவுகள் அடிப்படையில், இதற்கான விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' முறையில் பெறும் பணிகள் துவங்கின. இதில், மற்ற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இருந்து இத்திட்டத்துக்கு கடந்த ஓராண்டில், 622 விண்ணப்பங்கள் மட்டுமே பதிவாகி உள்ளதாக, மத்திய வீட்டுவசதி துறை இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின், முதலாவது பாகத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நிலுவையில் உள்ள கட்டுமான பணிகளை முடித்து, பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால், இரண்டாவது பாகத்தில் வீடுகள் பெற, நகர்ப்புற உள்ளாட்சிகள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில், வீடுகளுக்கான தேவை அதிகமாக உள்ளதால், விண்ணப்ப பதிவு பணிகள் விரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.