உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்வையற்றோர் 8ம் வகுப்பு வரை படித்தால் போதுமா? அரசு அலட்சியத்தால் படிப்பை கைவிடும் நிலை

பார்வையற்றோர் 8ம் வகுப்பு வரை படித்தால் போதுமா? அரசு அலட்சியத்தால் படிப்பை கைவிடும் நிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பார்வையற்ற மாணவர்களுக்கான அரசு நடுநிலை பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தாத காரணத்தால், எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும் பார்வை குறைபாடுடைய மாணவர்கள், வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பார்வை குறைபாடுடைய மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், மூன்று உயர்நிலை, மூன்று நடுநிலை மற்றும் நான்கு துவக்கப் பள்ளி என, 10 சிறப்பு பள்ளிகள் நடத்தப்படுகின்றன. சேலம், தர்மபுரி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி, அவற்றை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தாமல் உள்ளனர். இதனால், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும் மாணவர்கள், உயர்நிலை வகுப்புகளில் சேராமல், இடைநிற்றலில் ஈடுபட்டு வருவதாக, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, அச்சங்க நிர்வாகியும், பார்வையற்ற பள்ளி ஆசிரியருமான கருப்பையா கூறியதாவது:

பார்வையற்ற மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில், 60 மாணவர்கள் படித்தால், பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும்; 80 மாணவர்கள் படித்தால், அப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த வேண்டும். சேலத்தில் கடந்தாண்டு, 52 மாணவர்கள் படித்தனர்.இவர்களில் 16 பேர், எட்டாம் வகுப்பை நிறைவு செய்துள்ளனர். ஆனால், அவர்களில் பலர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் சேரவில்லை. தஞ்சை, சென்னை, திருச்சி மாவட்டங்களில் மட்டுமே, உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. வெகு துாரம் என்பதால், பெற்றோர் இங்கு செல்ல அனுமதிப்பதில்லை. இதுகுறித்து, மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், '60 மாணவர்கள் இருந்தால் தான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்' என்கின்றனர்; 52க்கும் 60க்கும் பெரிய வேறுபாடு இல்லை. எண்ணிக்கையை காரணம் காட்டி, இடைநிற்றலை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மாணவர்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிடாமல், இடைநிற்றல், தொலைவு, மாணவர்களின் மனநிலை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, பள்ளிகளை உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கடந்தாண்டு, சேலம் பார்வையற்றோர் அரசு நடுநிலை பள்ளியில், எட்டாம் வகுப்பை நிறைவு செய்து, ஓராண்டாக வீட்டிலேயே உள்ளேன். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் படிக்க, திருச்சி அல்லது சென்னை செல்ல வேண்டும். துாரம் என்பதால், பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். சேலத்தில் உள்ள பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டால் மட்டுமே, அடுத்த வகுப்புகளில் படிக்க இயலும்.- மாணவி தக் ஷினா, தர்மபுரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ