சென்னை: சட்டசபையில், 'பொன்னப்ப நாடார் பேரன் நான் என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் பேசியதை நீக்க வேண்டும்' என, சபாநாயகர் அப்பாவுவுக்கு, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் ரமேஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:சட்டசபையில் பதியப்பட்ட ஒரு பொய் தகவலை, உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வந்து, சபைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்துகிறேன்.கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வும், சட்டசபை காங்கிரஸ் குழு தலைவருமான ராஜேஷ்குமார் தன்னை, பொன்னப்ப நாடாரின் பேரன் என, சட்டசபையிலேயே பதிவு செய்துள்ளார். 'கன்னியாகுமரி கோமேதகம்' என, போற்றிப் புகழப்பட்ட பொன்னப்ப நாடார், சட்டசபை எதிர்கட்சித் தலைவராக திறம்பட செயல்பட்டவர். பொன்னப்ப நாடாரின் நேரடி பேரன் முறையில் ராஜேஷ்குமார் வரமாட்டார். இதற்கு சான்றாக, பொன்னப்ப நாடார் குடும்ப உறவுகள் கொடுத்த நாளிதழ் விளம்பரத்தில், ராஜேஷ்குமார் பெயர் இல்லை. இதை சான்றாக, தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். பொன்னப்ப நாடாரின் மகன் பொன் விஜயராகவன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். இப்போது, பா.ஜ.,வில் உள்ளார். அதேபோல், அவரது நேரடி வாரிசு பேரன்கள் யாரும் அரசியல் களத்தில் தீவிரமாக இல்லை. அதனால், தன்னை பொன்னப்ப நாடாரின் பேரன் என, ராஜேஷ்குமார் தன் அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார். சட்டசபையிலும் அதை குறிப்பிட்டுள்ளார். உண்மையில், ராஜேஷ்குமாரின் தந்தை பெயர் செல்வராஜ். தாத்தா பெயர் ஞானசிகாமணி. தன் அரசியல் லாபத்திற்காக, பொன்னப்ப நாடார் பெயரை தவறாக பயன்படுத்தி, பொய் பேசி வருகிறார் ராஜேஷ்குமார்.இது சரியான வரலாற்று தகவல் இல்லை என்பதால், ராஜேஷ்குமார் பேசிய தகவலை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரத்த உறவு முறையில்
நானும் பேரன் தான்!பொன்னப்ப நாடாரின் உடன் பிறந்த அக்கா பால்தங்கம்; அவரது கணவர் ஞானசிகாமணி நாடார். இவர்களின் மகன் செல்வராஜ். அவருடைய மகன் தான் நான். அதாவது, என் தந்தையின் தாய்மாமன் தான் பொன்னப்ப நாடார். அந்த உறவு முறையில், நானும் அவருக்கு ரத்த உறவு பேரன் தான்.ராஜேஷ்குமார், சட்டசபை குழு காங்., தலைவர்