உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐஸ்கிரீமில் சோப்பு துாள் கலப்பா? ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவு!

ஐஸ்கிரீமில் சோப்பு துாள் கலப்பா? ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் சோப்பு துாள் கலப்படம் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரில், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான உற்பத்தி நிறுவனங்களில், தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் கண்டறியப்பட்டன.

பாதிப்பு

குறிப்பாக, 'கிரீம்' உருவாக்க துணிகளுக்கான சலவை சோப்பு துாளையும், குளிர்பானங்களில் நுரையை அதிகரிக்க, 'பாஸ்போரிக்' அமிலமும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், செலவை குறைக்க, யூரியா உள்ளிட்ட பொருட்களில் தயாரிக்கப்பட்ட செயற்கை பால் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சர்க்கரைக்கு பதிலாக, சுவை மற்றும் நிறத்தை மேம்படுத்த, 'சாக்ரின்' மற்றும் சாயக் கலவையும் சேர்ப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. கலப்பட ஐஸ்கிரீம் சாப்பிடுவோருக்கு, தொண்டை, உணவு குழாய், வயிற்றில் பாதிப்பு கள் ஏற்படுகின்றன. எனவே, சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் தயாரித்த நிறுவனங்கள் மீது, அம்மாநில உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. அதேபோல், கேரள மாநிலத்திலும் சுகாதாரமற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோடை காலங்களில் அதிகளவில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

உரிமம் ரத்து

கலப்படத்தை தடுக்க, ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்து, தரப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை விற்பனையில் உள்ள ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். கலப்படம் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை