உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தேக்கம்: உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பாதிப்பா?

கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தேக்கம்: உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பாதிப்பா?

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், கட்டுமான திட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 10,000 சதுரடி வரையிலான கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளே ஒப்புதல் வழங்கலாம். இதில், 3,500 சதுரடி வரையிலான கட்டடங் களுக்கு, மக்கள் சுயசான்று முறையில் விண்ணப்பித்து ஒப்புதல் பெறலாம்.

நேரடி ஒப்புதல்

இதனால், 3,501 சதுரடி முதல், 10,000 சதுரடி வரையிலான கட்டடங்களுக்கு உள்ளாட்சிகள் நேரடியாக ஒப்புதல் வழங்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் மீது, 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், சிறிதளவு தாமதம் ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது, மாநகராட்சிகளில் மண்ட லத்துக்கு, 50 விண்ணப்பங் கள் வரை, இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றன. இதனால், வீடு கட்டுவது தொடர்பான அடுத்தடுத்த பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை தேவை

இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது: தமிழகத்தில் கட்டட அனுமதி பணிகளை விரைவுபடுத்த, அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. எனினும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், கட்டட அனுமதி பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.பரிசீலனை முடிந்த விண்ணப்பங்கள், இறுதி முடிவுக்காக காத்திருப்பது அதிகரிக்கிறது. மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், தலா, 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் காத்திருக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களை தொடர்பு கொண்டால், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் பணிகளில் இருக்கிறோம். விரைவில் கட்டட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்கின்றனர். சிறப்பு முகாம்கள் பணி முக்கியம் என்றாலும், வழக்கமான பணிகள் முடங்குவதை தவிர்க்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை