உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலஸ்தீனம் ஒருபோதும் தனி நாடாகாது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு

பாலஸ்தீனம் ஒருபோதும் தனி நாடாகாது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறைப்படி அங்கீகரித்தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலஸ்தீனம் தனி நாடாகாது என தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர் இரண்டாண்டுகளை எட்டியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முழுமையாக அழித்து, காசாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக உச்சகட்ட போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடு கள் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளவர்களுக்கு, ஒரு தெளிவான செய்தியை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதியை வழங்குகிறீர்கள். இன்னொன்றையும் உங்களுக்கு சொல்கிறேன். நீங்கள் கூறியது நடக்காது. ஜோர்டான் நதிக்கு மேற்கே எந்த பாலஸ்தீன நாடும் உருவாகாது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து பல்வேறு அழுத்தங்கள் வந்தபோதிலும், நான் இந்த பயங்கரவாத அரசு உருவாவதை பல ஆண்டுகளாக தடுத்து வருகிறேன். நாங்கள் உறுதியுடனும், அரசியல் ஞானத்துடனும் இதை செய்துள்ளோம். மேலும், யூத குடியேற்றங்களை இரட்டிப்பாக்கியுள்ளோம். இதனை நாங்கள் மேலும் தொடர்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அடுத்தது என்ன? பாலஸ்தீனத்தை ஐ.நா.,வின் 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 140க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இவர்களின் நட்பு நாடுகள் உட்பட குறைந்தது 45 நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகளில் பெரும்பாலானவை, ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் அது இருக்கக் கூடாது என்று கூறியுள்ளன. ஆனால், இதை ஹமாஸ் ஏற்கவில்லை. 'அங்கீகாரம் என்பது அரசியல் மற்றும் சட்டப்பூர்வ உரிமைக்கும் இடைப்பட்டதாகும். அங்கீகாரம் அளிப்பதாலேயே, ஒரு குறிப்பிட்ட பகுதி தனி நாடாக முடியாது ' என, நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
செப் 24, 2025 06:55

நீங்கள் பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதியை வழங்குகிறீர்கள்., உண்மையான வார்த்தை


cpv s
செப் 23, 2025 10:44

no more plastine state, all are israle land only, who ever wnt live under control of israle they can otherwise forced out from israle