6,500 கிலோ செயற்கை கோள் விரைவில் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன்
சென்னை: ''அமெரிக்கா வடிவமைத்துள்ள, 6,500 கிலோ எடையுள்ள செயற்கை கோளை, அடுத்த சில மாதங்களில், இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது,'' என, அதன் தலைவர் நாராயணன் தெரிவித்தார். சென்னை காட்டாங்கொளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்.பல்கலையின், 21வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக மஹாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தினார். விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு, எஸ்.ஆர்.எம்.பல்கலை சார்பில், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன், 8,994 இளநிலை மாணவர்கள், 564 முதுநிலை மாணவர்கள், 141 பி.எச்.டி மாணவர்கள் என, மொத்தம் 9,769 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது: நம்நாடு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த, 1963ல் இஸ்ரோ உருவாக்கப்பட்டது. அப்போது, அமெரிக்கா வழங்கிய ஒரு சிறிய ராக்கெட்டை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. கடந்த மாதம் 30ம் தேதி, வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தது. 'நிசார்' செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்ணில் ஏவுதல் நிகழ்வை, நாசா விஞ்ஞானிகள் வெகுவாக பாராட்டினர். அமெரிக்காவிடம் இருந்து, ஒரு சிறிய ராக்கெட் பெற்ற இந்தியா, சில மாதங்களில் அமெரிக்கா வடிவமைத்த, 6,500 கிலோ எடையுள்ள, தகவல் தொடர்பு செயற்கை கோளை, ஏவ தயாராக இருக்கிறது. இதுதான் நாட்டின் வளர்ச்சி. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, இந்தியாவின் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை, நம் செயற்கை கோள்கள் வழியே உறுதி செய்தோம். தற்போது, இஸ்ரோவின், 56 செயற்கை கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், அந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கப்படும். வரும், 2035ம் ஆண்டுக்குள், இஸ்ரோ அதன் சொந்த விண்வெளி நிலையத்தை விண்வெளியில் உருவாக்கும். அடுத்து, 2040ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாம் இருப்போம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், எஸ்.ஆர்.எம். பல்கலை வேந்தர் பாரிவேந்தர், இணைவேந்தர் சத்யநாராயணன், துணைவேந்தர் முத்தமிழ் செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். சர்வதேச மொழிகளுக்கு முக்கியத்துவம் விழாவில், மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சமுதாயத்திற்கு தேவையான, தலைமை பண்புகளை, மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் பெற்றோரின் தியாகங்களை, எந்த நேரத்திலும் மறக்க கூடாது. கடந்த 10 ஆண்டுகளில், நாடு மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளது. இஸ்ரோவின், 'சந்திராயன் 2' திட்டமிட்டபடி இலக்கை அடையாத நிலையிலும், 'நான் நிதி தருகிறேன். நீங்கள் நிலவிற்கு விரைவில் விண்கலனை அனுப்புங்கள்' என, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஊக்கம் அளித்தார். சைக்கிளில் ராக்கெட் பாகங்கள் கொண்டு சென்ற காலம் மாறி, இன்று நாசா போன்ற விண்வெளி நிறுவனங்கள், நம் இஸ்ரோவை கவனிக்க கூடிய காலம் துவங்கி இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில், கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆங்கிலம் மட்டுமின்றி, சர்வதேச மொழிகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ***